புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு!

யாழில் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு!

3 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நண்பகல், யாழ்.பல்கலைக்கழக சபா மண்டபத்தில், முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும், பீடத்தின் 6ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கான இணையத் தளத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சம்பிரதாய பூர்வமாக இயக்கி ஆரம்பித்து வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆய்வு மாநாடு குறித்து வழங்கப்பட்ட விபரம் வருமாறு: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது 6வது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டினை ‘நிலைபேறான அபிவிருத்திக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்கள், பொருளாதார மீண்மைக்கான தீர்வுகளுக்கு ஊக்கமளித்தல்’ என்ற ஆய்வுக் கருப்பொருளில் 2021ஆம் ஆண்டு சித்திரை மாதம் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்திருக்கின்றது.

எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடிகளினைத் தவிர்த்து வாய்ப்புக்களையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களினையும் நிவர்த்தி செய்யக்கூடியவாறான நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்குவது தற்காலத்தில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழலினை ஒன்றிணைப்பதாகக் காணப்படுகின்றது. நாம் எல்லோரும் பல்வேறுபட்ட எதிர்பாராத சவால்களும் இடர்களும் மிகுந்த சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

குறிப்பாக கொவிட்– 19 பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பரந்த தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிது.

இந்த இடர் பல மில்லியன் வேலைவாய்ப்புகளினை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது. அத்துடன் நாடுகளின் பொருளாதர மந்தம், வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்ளின் முடக்க நிலை போன்றவற்றை தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு வித்திட்டு வருகின்றது.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதார நலன் சார்ந்த மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறைகளினூடாக பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளினை பெற்றுக்கொடுப்பதோடு நிலைபேறான அபிவிருத்தியினை நோக்கிய செயற்பாடுகளிற்கு வழியமைக்க வேண்டியது அவசியமாகின்றது.

பொருளாதாரத்தினை மீள் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல், வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமை ஒழிப்புத்திட்டங்களை வலுப்படுத்தல், ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்குதல், மகிழ்ச்சியான நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழலினைப் பேணுதல் போன்ற கொள்கை நடைமுறைகள் நிகழ்காலத்தில் இன்றியமையாததாக் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் அமைதி மற்றும் செழிப்பு மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய நடைமுறைச் சாத்தியமான விடயப்பரப்புகளை உள்ளடக்கிய முகாமைத்துவ மற்றும் வணிக துறைகளில் நடாத்தப்படுகின்ற ஆய்வுகளானவை மிகவும் பயனுறுதி வாய்ந்ததாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக மனிதவளம், நிதி, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் சார் சவால்களை தீர்க்கக்கூடிய பொறிமுறைகளை நிறுவுவதுடன் நிலைபேறான அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும் முகமாக இவ் ஆய்வுகள் அமையப்பெறுகின்றன.

நீண்டகால அபிவிருத்தியினை மையமாக கொண்டு இயங்குகின்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவல்ல தந்திரோபாயங்களைக் கண்டறிதல் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை வகுத்தல் போன்றன பெரும்பாலான முகாமைத்துவம் மற்றும் வணிகம் சார் ஆய்வுகளின் முடிவுகளாகின்றன.

அந்தவகையில் இவ் ஆய்வு மாநாடானது தனியே நிலைபேறான அபிவிருத்தியின் சமகால மாற்றத்தினை மட்டுமல்லாது எதிர்கால திட்டங்களை முன்கூட்டியே வகுக்கக்கூடிய நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்கக்கூடிய வணிகச் செயற்பாடுகளை ஆய்வின் முடிவுகளாக வேண்டி நிற்கின்றன.

அதாவது தற்கால தீர்வுகளினை வழங்கவல்ல நிலைபேறற்ற அபிவிருத்தியின் மோசமான விளைவுகளை தவிர்க்கவல்ல நீண்டகால பொருளாதார விருத்தியினை ஏற்படுத்தகூடிய பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அபிவிருத்தியினை நோக்கியதான பார்வையில் இவ் 6வது சர்வதேச ஆய்வு மாநாடானது தனது கருப்பொருளினை உருவாக்கியுள்ளது.

இது வணிகங்களை முகாமை செய்தல், மனிதவள முகாமைத்துவம், நிறுவன நடத்தை, நிறுவன தொழில்நுட்பம், நிதி மற்றும் கணக்கியல், சந்தைப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார சமூககொள்கைகள் போன்ற ஆய்வுப் பரப்புகளை கொண்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு இதழ்களில் பிரசுரிக்கக்கூடிய சந்தர்ப்பமானது பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளினை மாசி மாதம் 26ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

முதல்முறையாக உலகப் புகழ்வாய்ந்த பேராசிரியர்களான I. M. Pandey, A. Parasuraman மற்றும் Gary Dessler முதன்மைப் பேருரைகளினை நடத்தவிருக்கின்றார்கள்.

இவ் ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுத் தலைவராக முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி. ந. கெங்காதரன் செயற்படுகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More