காத்திருப்பு | சிறுகதை | சன்மது

இன்று எப்படியாவது பார்த்துவிடலாம் என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தது சரவணனின் ஆழ்மனம்.

அந்த வீட்டின் நேரெதிரில் வாகனத்தில் அமர்ந்த படியே அந்த வீட்டை உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

காலம் கடந்துக் கொண்டிருந்தது…

இந்த டைமுக்கு வந்து இருக்கணுமே… விரல்களில் எடுக்கப்பட்ட சுடக்கு தீர்ந்து போனதால், வெறுமென வளைந்துக் கொடுத்தது விரல்கள். மேற்கே மறைந்துக் கொள்ள துடிக்கும் சூரியன் தேய்ந்துக் கொண்டிருந்தான். இளஞ்சூடு மெல்ல பரவியது.

பொதுவாக காத்திருப்பது என்பது ஒரு சுகமான சுமை. நொடிகளை கடத்திக் கொள்ளும் அப்படி ஒரு காத்திருப்பு, நிகழ்ச்சிக்கு தகுந்தாற்போல உருமாறிக் கொள்கிறது. சந்திப்பிக்கான சந்தர்ப்பங்களில் முழுமை பெறுகிறது.

அவனை சுற்றியும் பார்த்துக் கொண்டான், அந்த கருப்பு நிற உயரமான இரும்புக் கதவு ஒட்டுமொத்த வீட்டின் அழகை பாதி மறைத்துக் கொண்டது. மீதித் தோற்றத்தை மதில்சுவர் திரையிட்டது.

தினமும் அந்த கருப்பு கதவின் திறப்பை எதிர்நோக்கி இருந்தது சரவணன் பார்வை. எதற்கோ திறக்கப்படும் கதவில் எட்டிப் பார்க்கும் ஆவல் ஏமாற்றப்பட்டது.

அலுவுலகத்தில் பணியிடையே தோன்றி மறையும் நினைவுகளில் சில சமயம் சிலந்தி வலையை பின்னிக் கொள்கிறது. அடிக்கடி இப்படி ஒன்று கனவில் வந்து போவதுண்டு ஆனால் கனவை நிஜமாக்கிய வண்ணம் அன்று நடந்துவிட்டுப் போன நிகழ்வு மனதை விட்டு அகலாமல் சிறு துரும்பென நெருடிக் கொண்டே இருந்தது.

அன்று நடந்துக் கொள்ளவிற்கும் அனைத்துமே எனக்கு தெரியாமல் நடந்தது தான் மிகைப்பு. யாரும் இல்லாத தார்ச்சாலை எப்போதும் போல நானும் எனது வாகனமும் உலா கொண்டிருந்த நேரம்… அப்போது தான்… சாலையைக் கடக்க முடியாமல் தடுமாற்றத்தில் பின்னிக் கொண்ட கால்கள், நல்ல அழகு, காற்றில் மிளிர்ந்துக் கொள்ளும் ரோமம்.. எது என்னை கவர்ந்திற்க கூடும், அந்த நிறம்,கருமுழி கொண்ட விழி…

எது என்பதற்குள் அந்த விபத்து நடந்தேறிவிட்டது, அந்த விபத்து… எப்போதும் போல நிற்காமல் சென்ற வாகனம்… நிறுத்த நேரமில்லை… கனவில் இப்படி ஒரு அழகை மட்டுமே தான் கண்டேன் அதற்கு பின் வரும் விபத்து இனிமேல் தான் கனவில் வருமோ என்னவோ?

கைகளில் பற்றி தூக்கியது தெரிந்தது.

அந்த ரத்த வாடை இன்னமும் என் நாசியில் ஒரு அச்சத்தை மின்னலென கீறிவிட்டுச் செல்கிறது.

அந்த நொடிகளில் துளிர்ந்துக் கொண்ட சாயமற்ற நிஜங்கள் இறகென என்முன் மிதந்துக் கொண்டதில் பல முறை இறந்துக் கொண்டேன். என்னை மட்டும் அந்த கண்கள் பார்த்துக் கொண்டதில் இன்னொரு முறை பிறந்துக் கொண்டேன். யாரும்

என் அருகில் கூட நான் இல்லாதது அப்போதுமட்டும் உணர்ந்தேன்.

“தம்பி என்னப்பா ரொம்ப நேரம் இங்க உக்காந்திட்டு இருக்க, அப்பறம் அடிக்கடி இந்த வீடு முன்னாடி இப்படி வந்து உக்கார பழக்கத்தை விட்டுடு…”

அந்த வீட்டின் வாட்ச்மேன் அதிகார தோரணையில்…

“இல்ல .நான்…”

“புரியுதுப்பா ஒரு நாள் எங்க வீட்டு பொமரேனியன் பப்பி திறந்திருந்த கதவை தாண்டி ரோட்டுக்கு ஓடிருச்சு… ரோட்டை கிராஸ் பண்ணறப்போ அடிபட்டுருச்சு… அதை நீ தான் காப்பாத்துன… நான் இல்லைனு சொல்லுலே.. அதுக்காக தினமும் வந்து இப்படி கதவு முன்னாடி நின்னு வீட்டையேப் பார்த்தா என்ன அர்த்தம் ….”

அவன் கண்களில் இன்னும் உடைபடாத அழகின் தொடர்ச்சியைத் துண்டித்து போன காலத்தின் இடைவெளியை நிரப்பதுடிக்கும் இந்த காத்திருப்பு…

இந்த காவலாளிக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை…

– சன்மது

நன்றி : கீற்று இணையம்

ஆசிரியர்