Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘பட்ஜட்’டை ஏன் எதிர்க்கவில்லை? – சுமந்திரன் விளக்கம்

‘பட்ஜட்’டை ஏன் எதிர்க்கவில்லை? – சுமந்திரன் விளக்கம்

4 minutes read

”நீண்ட காலம் நீடிக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுப்பார் என்று ஜனாதிபதி கடந்த சில நாள்களாகத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார். அந்தக் கூற்று குறித்து நாங்கள் அவநம்பிக்கை கொண்டாலும், அவரை நாங்கள் நம்பாவிட்டாலும், இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்க்கப் போகின்றேன் என்று கூறும் ஜனாதிபதிக்கு எதிர்ப்புக் காட்டிக் குழப்பினோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது வரக்கூடாது என்பதற்காக இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக எங்கள் வாக்கை அளித்து எதிர்ப்பைக் காட்டும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக்கின்றோம்.”

– இவ்வாறு நாடாளுமன்றத்தில் அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது, நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது,

“21ஆவது திருத்தமானது இலங்கையின் சக்திவாய்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மூலமான அத்துமீறல்களைத் தடுக்கும் என உறுதியளிக்கப்பட்டமைக்கு மாறாக, ஜனாதிபதி தாம் விரும்பும் எத்தனை அமைச்சுப் பதவிகளையும் வகிக்க வழி செய்திருக்கின்றது.

21ஆவது அரசமைப்புத் திருத்தமானது, வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எந்தவொரு அதிகாரத்தையும் பறிக்காத கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

இந்தத் திருத்தம் வெறும் கண்துடைப்பாகும். அது உண்மையில் இந்த நாட்டில் எதையும் சுதந்திரமாக்கவில்லை. எந்தவொரு நிறைவேற்று அதிகாரத்தையும் ஜனாதிபதி பதவியிலிருந்து அது பறிக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஜனாதிபதி நிதி அமைச்சுப் பொறுப்பை வகிப்பதை 2010 ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்த்து வருகின்றோம்,

இந்த சபையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் பட்ஜட்டைத் தாக்கல் செய்யும்போது, அரசமைப்பு 148வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொது நிதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தச் சபையின் திறனை அது தீவிரமாகக் குறைக்கின்றது.

இலங்கையின் அரசமைப்பின் 148 ஆவது பிரிவு “பொது நிதியில் நாடாளுமன்றம் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் தவிர, எந்தவொரு உள்ளூர் அதிகாரசபை அல்லது பிற பொது அதிகாரசபையால் வரி, விகிதம் அல்லது வேறு எந்த வரியும் விதிக்கப்படாது” எனக் கூறுகின்றது.

21 ஆவது திருத்தம், 20வது திருத்தத்தை இல்லாமல் செய்து, மீண்டும் 19ஆவது திருத்த நிலைமைக்குத் திரும்ப வழிசெய்யும் என்று கூறினார்கள். அது சுத்தப் பொய் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சை வைத்திருப்பது அம்பலப்படுத்துகின்றது.

19வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் எந்தவொரு அமைச்சையும், பாதுகாப்பு அமைச்சைக் கூட வைத்திருக்க முடியாது. அந்த நேரத்தில் இருந்த அந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்கு – அவருக்கு தனிப்பட்ட வசதியாக – மைத்திரிபால சிறிசேனவுக்கு, இடைக்கால ஏற்பாட்டில் மூன்று பெயரிடப்பட்ட அமைச்சுக்கள் அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் 19 ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் எந்த அமைச்சுக்களையும் வகிக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் வகிக்க முடியும். உண்மையில் அவரால் அனைத்து அமைச்சுக்களையும் தம் வசமே வைத்திருக்க முடியும்.

21வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டன், சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்பட்ட பொய்யை நாட்டுக்கு அம்பலப்படுத்துவதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தத் திருத்தத்தில் அரசமைப்புக் கவுன்ஸிலை மீண்டும் அமைப்பது பற்றிக் கூறப்படுவது ஒரு சாதகமான விடயம்தான். ஆனால் அதுவும் கூட ஓர் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு என்று நாங்கள் சுட்டிக்காட்டினோம். இது 17ஆவது திருத்தத்தில் இருந்த கவுன்ஸில் அல்ல.

இந்த சபையில் இருந்து அதிகமான உறுப்பினர்கள் அதில் உள்ளனர், அது அதை அரசியலாக்குகின்றது. மற்றவற்றுடன், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் அந்த அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பு கடமைப்பட்டுள்ளது’.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கை திரும்பிய போது அவரை வரவேற்றார் எனக் கூறப்படும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரின் நடவடிக்கை தொடர்பில் பரவலாகக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் இந்த சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். பெரிய அளவிலான ஊழல்களுக்காக இந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒருவரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் வி.ஐ.பி. லவுஞ்சுக்குச் சென்று வரவேற்பதைத் பார்த்தோம். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரைத் தவிர வேறு யார் பஸிலை வணங்கி வரவேற்றார்கள்?

அதற்குச் சில நாள்களுக்கு முன்னர், காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஒரு சிலர் மட்டுமே காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர் என்றும் கூறியமையை நாங்கள் கேட்டோம். அந்த அலுவலகமே காணாமல்போனவர்கள் குறித்து விசாரணை நடத்த உருவாக்கப்பட்டது. அரச ஆணைக்குழுக்கள் பல உள்ளன. அவை அனைத்தும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர் என அறிக்கை அளித்துள்ளன. இது ஒரு பழமைவாத எண். ஆனால், இந்த சுயாதீன அலுவலகம் எனக் கூறப்படும் அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் தலைவர் யாரும் காணாமல்போகவில்லை எனக் கூறுகின்றார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அரசு முன்னுரிமை அளிப்பதை ஆணைக்குழுவின் தலைவர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என அந்தக் கருத்துக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச விளக்கமளித்தார்.

‘இது மற்றொரு சிக்கலை உருவாக்குகின்றது. ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் சுதந்திரமாக இருந்தால் அரசின் முன்னுரிமைகள் என்ன என்பதை ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? அரசு செய்ய விரும்புவதை அவர் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? நாளை அதைச் செய்ய அரசு விரும்பாமல் இருக்கலாம். அரசு நாளுக்கு நாள் மனதை மாற்றிக் கொள்கின்றது. ஆனால், இது ஒரு சுயாதீனமான அலுவலகம் என்றால், நாட்டில் இந்தப் பல்லாயிரக்கணக்கான காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்க சட்டத்தின் மூலம் அவர் பணிக்கப்பட்டுள்ளார். அவர் சுயாதீனமாக இயங்க வேண்டும். அரசின் விருப்பை உள்வாங்கியல்ல.

இந்த வரவு – செலவுத் திட்டத்தை தமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

பாதுகாப்புச் செலவினங்களுக்குப் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு, ஊழியர் சேமலாப நிதியில் பெருமளவு ஊழல் மோசடி, முறைகேடுகள் எனப் பல விடயங்கள் உள்ளன.

இந்தக் காரணங்களுக்காக நாம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இந்த வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், ஒரேயொரு காரணத்துக்காக இதை எதிர்த்து வாக்களிப்பதில்லை என நாம் முடிவு எடுத்துள்ளோம்.

நீண்ட காலமான தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுப்பார் என்று ஜனாதிபதி கடந்த சில நாள்களாகத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார். அந்தக் கூற்று குறித்து நாங்கள் அவநம்பிக்கை கொண்டாலும், அவரை நாங்கள் நம்பாவிட்டாலும், இந்தப் பிரச்சினையை பேசி தீர்க்கப் போகின்றேன் என்று கூறும் ஜனாதிபதிக்கு எதிர்ப்புக் காட்டிக் குழப்பினோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது வரக்கூடாது என்பதற்காக இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக எங்கள் வாக்கை அளித்து எதிர்ப்பைக் காட்டும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக்கின்றோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More