இலண்டனில் அரங்கு நிறைந்த சுமார் இரண்டாயிரம் நூல்கள்
மற்றும் பல படைப்பாளிகள் மத்தியில் பத்மநாப ஐயருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான “நூலவர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் இலண்டன் இணையத்தளத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கல் நிகழ்வு இன்று இலண்டன் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. மூத்த படைப்பாளி மு. புஸ்பராஜன் ஆழமான சிறப்புரை வழங்கியிருந்தார்.
யாழ்ப்பான பொதுநூலக முன்னாள் நூலகர் திருமதி ரூபவதி நடராஜா, கிளிநொச்சியில் இருந்து வருகைதந்த ஈழப் படைப்பாளி தமிழ்க்கவி, மூத்த படைப்பாளி மு. புஸ்பராஜன் ஆகியோர் இணைந்து “நூலவர்” விருதை வணக்கம் இலண்டன் சார்பாக வழங்கி மாண்பேற்றிவைத்தனர்.
ஈழத்தில் நூல்களை பதிப்பித்தல், நூல்களை ஆவணப்படுத்தல், மின்னூல் திட்டத்தை முன்னெடுத்தல், இணைய நூலகத்தை ஆரம்பித்தல் முதலிய பணிகள் வழியாக இலக்கியம் மற்றும் ஈழ விடுதலை வரலாற்றுக்கு முன்னோடியாக பங்களிப்பை ஆற்றியவர் பத்மநாப ஐயர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமுத விழாவினைக் கொண்டாடிய இவர் நூல்களை ஆராதித்தல் என்ற நூலையும் வெளியிட்டு தனது கடந்த கால பணிகளை ஆவணப்படுத்தியுள்ளார். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வணக்கம் இலண்டன் இணையம் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்றாக பத்மநாப ஐயரை கௌரவிக்கும் வகையில் அவருக்கு “நூலவர்” எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பெருமைப்படுத்தும் நிகழ்வு வெகு விமர்சையாக இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள், அமைப்பு சார்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பத்மநாப ஐயருக்கு தமது அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டமை விசேட அம்சமாகும்.