“மக்களோடு மோதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தேவையில்லை. இதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாகக் கைவிட வேண்டும்” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏனையவர்களைவிட மற்றவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்கக்கூடியவர். ஆனால், அவருக்கென்று ஒரு திட்டம் உண்டு. அவர் அதையே செய்வார்.
அவர் நினைத்ததையே செய்பவர். அவர் பொது இணக்கப்பாட்டின் கீழ் வேலை செய்பவர் அல்லர்.
மத்திய வங்கியை சுயாதீனமாக்குவதற்கான சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எல்லாம் அவர் தான்தோன்றித்தனமாகக் கொண்டு வருவது. இதற்கு மக்களின் இணக்கம் கிடையாது.
நாட்டைப் பிரிப்பது போன்ற பயங்கரவாதம் இப்போது இங்கு இல்லை. இருப்பது சிவில் பிரச்சினை. அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவை இல்லை. இது மக்களோடு மோதும் விடயம். இவற்றையெல்லாம் ஜனாதிபதி ரணில் கைவிட வேண்டும்.
சிக்கலான நேரத்தில் நாட்டைப் பாரமேற்று உடனடியாக வழமையான நிலைமையைக் கொண்டு வந்தவர் ரணில். அந்தக் கௌரவத்தை அவர் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.