செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திம்பு முதல் இமாலயப்பிரகடனம்வரை தமிழருக்கு சவால் | கலைப்பீடாதிபதி ரகுராம்

திம்பு முதல் இமாலயப்பிரகடனம்வரை தமிழருக்கு சவால் | கலைப்பீடாதிபதி ரகுராம்

5 minutes read

 

திம்பு முதல் இமாலயப்பிரகடனம்வரை தமிழருக்கு சவால் என்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசத்தின் குரலில் நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி எஸ். ரகுராம் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் மக்கள் நிறைந்த அரங்கில் இடம்பெற்றது. தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியின் ஏற்பாட்டில் வணங்குவோம் வல்லமை சேர்ப்போம் என்ற தொனிப் பொருளில் நினைவுப்பேருரையும் கருத்தாடலும் இடம்பெற்றது.

இட்டுநிரப்ப முடியாத இடம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அ. சத்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அன்ரன் பாலசிங்கம் குறித்து நினைவுப் பகிர்வுகளை யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் நிகழ்த்தினார்.

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தலைமகள் ஒன்றுபட்டு ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இடம் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாக இன்னமும் இருக்கிறது என்று இதன்போது கலைப்பீடாதிபதி சுட்டிக்காட்டினார்.

அன்ரன் பாலசிங்கம் குறித்த நினைவுகளை உணர்வோடு சுட்டிக்காட்டிய கலாநிதி ரகுராம், இன்றைய காலத்தில் தமிழ் தேசிய அரசியலில் நாம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தனது தொடக்கவுரையில் சுட்டிக்காட்டியமை அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இமாலயப் பிரகடனம் எதற்கு?

இதேவேளை நிகழ்வில் கருத்துரையை ஊடகவியலாளர் அ. நிக்சன், தமிழ் தேசிய கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும் சாத்தியங்களும் என்ற தலைப்பில் வழங்கினார். தமிழ் மக்களை ஸ்ரீலங்கன் என்ற அடையாளத்திற்குள் தொலைக்கவே இமாலயப் பிரகடனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்னார்.

தமிழ் தலைமைகள் தமது கட்சியின் இருப்பு, தமது இருப்பு என்று இருக்காமல் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இவ்வாறு இமலாயப் பிரகடனங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களை எவரும் ஏமாற்ற முடியாது என்றும் கூறினார். இதேவேளை புலம்பெயர் தேசக் கட்டுமானங்கள் புவிசார் அரசியல் நோக்கு என்ற தலைப்பில் புலம்பெயர் தேசத்தில் இருந்து எழுத்தாளரும் ஆய்வாளருமான குணா கவியழகன் இணைய வழியாக கருத்துரையினை வழங்கியிருந்தார்.

பொதுவாக்கெடுப்பே தீர்வு

இதேவேளை குறித்த நிகழ்வில் விசேட அதிதியாக ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இணையவழியாக கலந்துகொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பே தேவை என்றும் அதனையே தாம் கோருவதாகவும் கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்களும் பொதுவாக்கெடுப்பை கோர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஈழத் தமிழ் மக்களும் பொதுவாக்கெடுப்பைக் கோரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாநாட்டுப் பிரகடனம்

இதேவேளை மாநாட்டின் நிறைவில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை கொண்ட இனமாக ஈழத் தமிழ் மக்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அது சார்ந்த பயணத்தில் உறுதியுடன் பயணிப்போம் என்றும் மாநாட்டுப் பிரகடனம் இயற்றப்பட்டது.

நிகழ்வை எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் ஒருங்கிணைக்க, வரவேற்புரையினை தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியின் வளவாளர் த. புருசோத்மனும், நன்றியுரையினை தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியை சேர்ந்த ஜனகா நீக்கிலாசும் வழங்கினர்.

கிழக்குத் தலைவர்கள் பங்கேற்பு

குறித்த நினைவேந்தல் மாநாட்டில், கிழக்கு மாகாணத்தில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா. ஸ்ரீஞானேஸ்வரன், கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்டோருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரகளான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண அவைத்தலைவர் சீ.வி. கே. சிவஞானம், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தி. சரவணபவன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ. வேழமாலிகிதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரேம்காந்த் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்வின் இறுதியில் மக்களின் பின்னூட்டக் கருத்துரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More