Monday, February 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு: பேச்சளவில் பல விடயங்களில் இணக்கப்பாடு! – ஜனா கூறுகின்றார்

ஜனாதிபதியுடனான சந்திப்பு: பேச்சளவில் பல விடயங்களில் இணக்கப்பாடு! – ஜனா கூறுகின்றார்

2 minutes read

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினை, உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கல், 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கல், வடக்கு – கிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடனான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று பிற்பகல் 3 மணியளவில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபொன்று அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஜனவரி மாதத்தில் இதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதாகப் பேசப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டன. பூநகரியில் சோளார் மற்றும் காற்றாலை திட்டங்கள், இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வது, இந்தியாவில் இருந்து குழாய் மூலமாக மின்சாரம், எரிபொருட்கள் கொண்டுவருவதுடன், இலங்கை இந்தியாவிற்கிடையில் தரைவழிப் பாதை போன்றவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டன.

இதன்போது எங்களாலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் இருப்பது தொடர்பிலும், கடந்த நவம்பர் மாதமளவிலும் மட்டக்களப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு அதில் 4 பேர்தான் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள், ஏனையவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது.

குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையும் மாவீரர் தின நிகழ்வுக்காக நிதி கோரியதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பில் ஒரு வித்தியாசமான நிலைமை இருக்கின்றது எனவும், மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்றும் கருத்துப்பட ஜனாதிபதி விடயங்களைத் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தான் ஆவன செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதன்போது நாங்கள் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் சம்பந்தமாகத் தெரிவித்தோம். அது தொடர்பிலும் மிக விரைவில் உரிய தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் உள்ளூரட்சி மன்றங்களிலே நீண்ட காலமாக அமைய, தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நாங்களும் எமது கோரிக்கையை முன்வைத்தோம். இது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விடயத்திற்கும் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது பிரதேச செயலாளர்களை மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்குத் தான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன் போது நான் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு பின்னர் 1988ஆம் ஆண்டு இலங்கை அரசால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன. ஆரம்ப காலத்தில் மாவட்ட அரச அதிபர், உதவி அரச அதிபர் என்றுதான் இருந்தது. அதனை 1988இல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் என்று சொல்லி அவர்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றைய நிலையில் கிராம சேவை உத்தியோகத்தர் பதவி கூட மாகாண சபைக்குப் பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசின் கீழ் இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் நாடாளுமன்றத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்த போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரகளிடமும் 13ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தீர்கள். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள். எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வராது என்று நினைக்கின்றோம்.

13ஆவது திருத்தம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு இடைக்காலத் தீர்வாகக் கிடைக்கப்பட்டது. அதையாவது முற்றுமுழுதாக நிறைவேற்றினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு மிக விரைவில் மீண்டெழும் என்ற விடயங்களும் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டன.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More