Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலின் உரையை அடியோடு நிராகரித்த சுமந்திரன்!

ரணிலின் உரையை அடியோடு நிராகரித்த சுமந்திரன்!

3 minutes read

“தமிழ்த் தேசியப் பிரச்சினையே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் அத்திவாரமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்க உரையில் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரின் கொள்கை விளக்க உரையை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தனது உரையில் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தான் பதவியேற்றபோது மக்களுக்கும் இந்தச் சபைக்கும் அவர் சொன்னது உடனடியாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் காண்போம் என்று கூறினார். அதற்கு நீங்கள் தயாரா, நீங்கள் தயாரா என இந்தச் சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து அவர் கேட்டார்.

அதன்பின்னர் அனைவரையும் சேர்த்து அனைத்துக் கட்சிகளின் மாநாட்டையும் மூன்று தடவைகள் கூட்டி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றெல்லாம் அவர் பறைசாற்றினார்.

அப்போது எங்களை அவர் அழைக்கின்றபோதே நாங்கள் சொன்னோம் இது வெறும் வார்த்தைகள். இதனைச் செய்ய அவருக்கு அரசியல் பலம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்க்கின்றவர்களைப் போலிப் பெரும்பான்மையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதி இதனைச் செய்ய முடியாது. ஜனாதிபதி வெறும் வார்த்தை ஜாலங்களாலே எம்மை ஏமாற்றுகின்றார் என்று சொன்னோம். ஆனாலும், நாங்கள் இதற்குத் தடங்கலாக இருந்தோம் எனச் சொல்லாமல் இருப்பதற்காக அனைத்துக் கூட்டங்களுக்கும் நாங்கள் போனோம். எங்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தினோம். அப்படிச் செய்திருந்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மூன்றாவது, நான்காவது கூட்டத்திலே எமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைப் பார்த்துச் சொன்னார் இந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளிலே ஒரேயொரு முடிவுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று சொன்னார்.

கூட்டங்கள் கூடி, கூட்டங்கள் கூடிச் செய்வதாகச் சொல்லிச் சொல்லி செய்வதே தன்னுடைய பழக்கமாகக்கொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தை முற்றுமுழுதாக மறுதலித்தவராக அரச கொள்கைப் பிரகடனத்தை இங்கே உரையாற்றியிருக்கின்றார். அவரின் கொள்கை விளக்க உரையை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். ஏனென்றால் இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினை ஏற்படுவதற்கு அத்திவாரமே இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினை. அதற்கான ஒழுங்கான ஓர் அரசியல் தீர்வு இல்லாமல் ஓர் ஆயுதத் தீர்வை இலங்கை அரசு முன்வைத்து அதற்காகக் கடன்கள் பெற்று நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கி விட்டிருக்கின்றமையை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைத் தான் தலைகீழாக மாற்றி அமைத்து விட்டார் என்று புகழுரைத்து வாய்மொழி மூலம் வெட்டி வீழ்த்திக் காட்டக் கூடிய திறமைசாலிப் பேச்சாளர் நம் ஜனாதிபதி. அதையே அவர் செய்கின்றார். அவை உள்ளீடு இல்லாத வெறும் வார்த்தைஜாலங்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

பொருளாதாரம் வழமை நிலைக்கு மீண்டு விட்டதாக ஒரு தோற்றப்பாடு காட்டப்படுகின்றது. தமது நீண்டகால அனுபவம் மூலம் பொருளாதாரக் கப்பலை ஆட்டமில்லாத ஸ்திர நிலைக்கு ஜனாதிபதி மாற்றி உள்ளார் என்பது உண்மையே. அதற்காக அவரை நாம் பாராட்டுகின்றோம்.

ஆனால், கடன் மீள்செலுத்துகைக்கான தடைக்காலத்தை நீங்கள் தொடர்ந்து பேணும்போது அது ஒருநாள் ஊதி வெடிக்கும் அனர்த்தம் ஆகிவிடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அந்தத் தடைக்காலம் உங்களுக்கு உடனடியாக மூச்சு விடும் நிவாரணத்தை தரலாம். ஆனால் நாட்டைச் சூழ்ந்த கருமேகங்கள் கொஞ்சம் தள்ளிப் போய், சற்று தாமதமாக நாட்டைச் சுளுவது போன்றது இது.

அதுபோல சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் கூட மேலும் கடன் பெறுவதற்கு எங்களுக்கு வசதிகளைத் தேடித் தந்திருக்கின்றது. அவ்வளவுதான். நாங்கள் கடன் வாங்கத்தான் வேண்டும். அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அது உண்மையில் நம்மை மேலும் கடனாளியாக்கப் போகின்றது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

எனவே, வெளியில் நிலைமை மேம்பட்டமை போல் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு நீண்ட கால அவதானிப்பு அது உண்மை நிலைமை அல்ல என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தும். நாடு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டை தேர்தல் வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். எங்கள் நாட்டின் அரசமைப்பும் சட்டங்களும் தேர்தல்கள் காலக்கிரம படி ஒழுங்காக நடத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால், இங்கு குடியாட்சி அல்ல, முடியாட்சி நடக்கின்றமை போல் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை ஜனாதிபதி தன் கையில் எடுத்து தனக்கேற்ப முன்னெடுக்க முயலுகின்றார்.

கடந்த வருட முற்பகுதியில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலை முறையற்ற விதத்தில் அவர் தடுத்துவிட்டார். அது அரசமைப்பை மீறிய செயற்பாடு. மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தாமல் ஜனாதிபதி இழுத்தடித்து வருகின்றார்.

இப்போது இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்று அவர் கூறுகின்றார். ஆனால் வலது பக்கம் திரும்புவதாக சிக்னல் போட்டு விட்டு, சடாரென இடது பக்கம் திரும்பும் போக்கைக் கொண்ட நமது ஜனாதிபதி இந்தத் தேர்தல் விடயத்திலும் என்ன திட்டம் உள்ளே வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More