செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “யாழ். தலைமைகள் கலந்து பேசி பொது முடிவு எடுக்க வேண்டும்!”

“யாழ். தலைமைகள் கலந்து பேசி பொது முடிவு எடுக்க வேண்டும்!”

3 minutes read

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த துரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை – தமிழக கலாசார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. அதனால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால் வர மாட்டார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களைக் கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர் ஷாருக் அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல இரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்தக் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள – பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்துப் போராடியதால், ஒரு பதற்ற நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகின்றார்கள்.

இனி யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்கக்கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட எம்.பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பைப் போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி.

யாழில் கலாசார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டுக் கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதைச் செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்குப் பணம் இல்லை.

அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More