Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? | அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? | அருட்தந்தை மா.சத்திவேல்

2 minutes read

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர்.

இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும்.

களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம்.

இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல.

அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர்.

இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது.

உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம்.

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும்.

சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும்.

தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More