Wednesday, May 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மரணத்தின் விளிம்பில் இருந்து மக்களை மீட்ட ஒரே தலைவர் ரணிலே! – ஹரீன் புகழாரம்

மரணத்தின் விளிம்பில் இருந்து மக்களை மீட்ட ஒரே தலைவர் ரணிலே! – ஹரீன் புகழாரம்

2 minutes read
நாட்டு மக்களை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

“2022 ஆம் ஆண்டை விடவும் இன்று பத்து மடங்கு நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார். அக்காலத்தில் மூன்று வேளை உணவு கேள்விக்குறியாகக் காணப்பட்டது. மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்பட்டனர்.

அப்போதைய ஆட்சியாளர்கள் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொண்டு மக்களுக்குச்  சேவையாற்றுமாறு பல முறை கோரியிருந்த போதும், அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் தனியொரு ஆசனத்தை மட்டும் பெற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு மக்கள் வாழ்க்கைக்குத் தகுந்த பொருளாதார நிலையை உருவாக்கினார். அதன்படி கடந்த 23 மாதங்களில் நாட்டை முன்னைய பொருளாதார நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.

இன்று, புறக்கோட்டை, மஹரகம, பதுளை அல்லது இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகைக் காலத்தில் பெருமளவில் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றிருக்காவிடின் இன்று நாட்டின நிலை என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விவாதத்துக்கு அழைப்பு விடுக்கும் எதிர்க்கட்சிகளிடம், ஏன் அன்று சவாலை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும். அந்தக் குழுக்களுக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காகப் பேசும் எந்தக் கட்சியும் இவ்வளவு சம்பளத்தை அதிகரிக்கவில்லை.

இன்று ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே இவை அனைத்தும் நடக்கின்றன. மீண்டும் தவறு செய்தால் நம்மை விட நம் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.” – என்றார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திஸாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சத்தியானந்த சுபசிங்க, ஜனாதிபதி தொழிற்சங்க அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More