செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி

மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி

3 minutes read

நாம் ஒரு தேசமாக திரள்வது ஒன்றுதான், பதினைந்து வருடகால, துயர நினைவுகளுக்கு – நாம் தேசமாக செலுத்தும் உன்னத அஞ்சலியாகும் என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி,  மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. “எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?” என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் – எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் – இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.

எங்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது. நீதி கோரி நாம் தொடர்ந்தும் போராடுகின்றோம் – ஆனாலும் எங்கள் முயற்சியில் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். இந்தக் குற்றவுணர்வுடன், மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தலை தாழ்த்துகின்றோம்.

நமது தேச விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களை நெஞ்சில் வைத்து போற்றும், கண்ணீரை துடைத்துக் கொள்ளும் இந்த உன்னத நாளில், நாம் நமக்குள் கேட்டுக் கொள்வோம்? நம்மால் ஏன் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை? நாம் எதிர்பார்த்த விடயங்கள் ஏன் நடைபெறவில்லை – எங்களது இதுவரை கால முயற்சிகளுக்கு என்ன நடந்தது? முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் கூட, சுதந்திரமாக காய்ச்சுவதற்கும் பருகுவதற்கும் சுதந்திரமில்லாத வாழ்வையல்லவா எமது மக்கள் எதிர் கொண்டிருக்கின்றனர். இதன் பின்னரும் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் – சர்வதேசத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றோம் – ஜ.நா.வுடன் தொடர்பில் இருக்கின்றோம் என்றெல்லாம் ஆறுதல் கொள்வதில் என்ன பெருமையுண்டு?

ஆரம்பத்தில் நம்பிக்கையை வாரி வழங்கிக் கொண்டிருந்த சர்வதேச அழுத்தங்கள் என்பவை, மெதுவாக ஒரு மாயமான் என்னும் தோற்றத்தை பெற்றிருக்கின்றது. ஏனெனில், அவ்வாறான அழுத்தங்களால்
சிங்கள ஆளும் வர்க்கம் அச்சம் கொள்ளவில்லை – ஒருவேளை அச்சம் கொண்டிருந்தால் இந்தளவு மூர்க்கத்துடன் அவர்களால் அரசியலை முன்னெடுக்க முடியாது.

அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகளும் அவர்கள் அச்சம் கொள்ளவில்லை என்பதையே காண்பிக்கின்றது. அழுத்தங்கள் தொடர்பில் அச்சம் கொள்ளாத அரசுகளிடமிருந்து நாங்கள் மனமாற்றத்தை எதிர்பார்க்க முடியாது – ஒன்றில் அவர்கள் அச்சம் கொள்ளக் கூடியவறான அழுத்தங்களை வெளியுலகம் கொடுக்கவில்லை – அல்லது, அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடியளவிற்கான பிரச்சாரத்தை எங்களால் முன்னெடுக்க முடியவில்லை.

கடந்த பதினைந்து வருட கால புலம்பெயர் சமூகத்தின் பரப்புரை தேல்வியில் இருந்துதான் நாம் இதனை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சரியான பாதையில் சென்றிருக்கின்றோம், வினைத்திறனாக செயற்பட்டு இருக்கின்றோம், சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயற்பட்டிருக்கின்றோம்,
சர்வதேசம் எங்களுக்காக அதன் செவிகளை திறந்து வைத்திருக்கின்றது – இப்படியெல்லாம் எங்களால் சொல்லிக் கொள்ள முடியுமானால், பின்னர் எவ்வாறு தொடர்ந்தும் நாங்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றோம்? ஏன் சிறிலங்கா அரசு கீழிறங்கவில்லை – தொடர்ந்தும் கீழிறங்க மறுக்கின்றது? இந்தக் கேள்விகளுக்கான பதிலில் நாம் கருத்தொற்றுமையுடன் சங்கமிக்கும் போது மட்டும் தான், நமது எதிர்கால செயற்பாட்டிற்கான கதவு திறக்கும்.

முள்ளிவாய்க்கால் துயரத்தின் உணர்வில் நாம் கலந்திருக்கும் இன்றைய கால பகுதியானது, நமது தேசத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதொரு காலப்பகுதியாகும். அரசியல் ரீதியில் நமது தேசம் பெரும் ஆபத்தை எதிர் கொண்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று நெருக்கடி. வங்குரோத்து நிலைக்குள் சிக்கிக் கிடக்கும் சிறிலங்கா மீண்டெழும் வழிகளை தேடி வருகின்றது. இந்தப் பின்புலத்தில்
இலங்கையின் ஒரே ஒரு பிரச்சினை பொருளாதார பிரச்சினைதான் என்னும் புரிதலை திணிக்கும் முயற்சியில் சிங்கள ராஜதந்திரம் தந்திரமாகவும், தூர நோக்குடன் செயற்பட்டு வருகின்றது. இந்தச் சவாலை வெற்றி கொள்ள நாம் என்ன செய்யப் போகின்றோம்?

சவாலை வெற்றி கொள்ளுதல் என்பது ஒரு கட்டம் என்றால் – முதல் கட்டம் சவாலை எதிர் கொள்வதாகும். நாம் ஒரு தேசிய இனம், தேசம் என்னும் நிலையில் எங்களை நிலை நிறுத்திக் கொள்வதுதான் முதல் கட்டமாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில், ஆயுதப் போராட்டம் அனைத்துமாக இருந்தது. அதனால் ஒரு தேசமாக எங்களை நிலை நிறுத்துவதற்கு பிரத்தியேக முயற்சிகள் தேவை பட்டிருக்கவில்லை ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. கடந்த பதினைந்து வருடங்களில் தாயக தலைமைகள் வீழ்சியுற்றிருக்கின்றன. எமது மக்கள் தங்களுக்கள் சிதறியிருக்கின்றனர். அரச ஆதரவு அரசியல் ஊடுருவி, வளர்கின்றது. இவற்றை எதிர்கொள்வதுதான், தேசமாக எழுவதிலுள்ள முதல் சவாலாகும்.

இதனை கடக்க வேண்டும் என்றால், முதலில் மீண்டுமொருமுறை நாம் ஒரு தேசமாகவே இருக்கிறோம் என்பதை இலங்கை தீவிற்குள் நிரூபிக்க வேண்டும். இது எவருக்குமானதல்ல – மாறாக எங்களுக்கானது.

இந்த அடிப்படையில்தான், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தவிர்க்க முடியாத – தவிர்க்க கூடாத, விடயமாக இருக்கிறது. களமும் புலமும் இதில் ஓரணியாக இணைய வேண்டும். அனைத்து தமிழ் தேசிய தரப்புக்களும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். சிறிலங்காவுக்கான ஜனாதிபதி தேர்தல் அரங்கில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, அவருக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கும் போது, அது கடந்த பதினைந்து வருடகால சரிவுகள், சிதைவுகள், தடுமாற்றங்கள், தோல்விகள்,
முரண்பாடுகள் அனைத்தையும் தமிழ் தேசிய வேள்வித் தீயில் எரித்து விடும். மேலும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலை ஓர் பொது வாக்கெடுப்பாக மாற்றுவது எமது சாமத்தியமாகும். நாம் புதுப் பொலிவுடன் நிமிர்வதற்கான சூழல் உருவாகும். இது இன்றைய சவாலை கடப்பதற்கான ஒரு வழியாகும்.

“காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கதவை தட்டுவான்” என்னும் புதுவை அண்ணரின் கவிவரியை மனதில் நிறுத்தி, நாம் ஒரு தேசமாக திரள்வது ஒன்றுதான், பதினைந்து வருடகால, துயர நினைவுகளுக்கு – நாம் தேசமாக செலுத்தும் உன்னத அஞ்சலியாகும்.“ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More