செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசு இணங்கவில்லை!

பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசு இணங்கவில்லை!

1 minutes read

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இணங்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உரிய காலத்தில் கட்சி தீர்மானம் எடுக்கும் என்று குறிப்பிட்டு, வேறு விதமாக அது முடிவெடுத்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய குழுவின் கூட்டம் இன்று (19) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனை குறித்து எதிர்பார்க்கப்பட்டபடி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பியான சி.சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கொள்கை ரீதியாகத் தாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கின்றனர் என்றும், அதைத் தங்கள் கருத்தாகப் பதிவு செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.

சி.வி.கே.சிவஞானம், குருகுலராஜா, குலநாயகம், மட்டக்களப்பைச் சேர்ந்த ரஞ்சனி, குகதாசன், கலையரசன், மன்னாரைச் சேர்ந்த பரஞ்சோதி, கோப்பாய் பரஞ்சோதி, இரத்தினவடிவேல், ஆர்னோல்ட், இளஞ்செழியன் போன்றோர் எல்லோரும் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.

விவாதத்தின் முடிவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “உரிய சமயத்தில் கட்சி உரிய முடிவை எடுக்கும். மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளையும், அவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து உரிய வேளையில் முடிவைக் கட்சி எடுக்கும்” – என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறியவந்தது.

இந்த விவகாரத்தையொட்டி தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை மாவே சேனாதிராஜா குறிப்பிட்டார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை முன்னெடுத்தால் சிங்கள தரப்பில் தமிழ் எதிர்ப்புணர்வு எகிறும் என்ற சாரப்பட சம்பந்தன் ஐயா தமக்குக் கருத்துத் தெரிவித்தார் என்பதைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிறீதரன் எம்.பி., ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம் முட்டாள்தனமான யோசனை என்றோ, பைத்தியக்காரத்தனமான யோசனை என்றோ தன்னிடம் சம்பந்தன் குறிப்பிடவில்லை என்றார்.

இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கருத்து எதுவும் வெளியிடாமல் அதீத மௌனம் பேணினார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய சிலர் தெரிவித்தனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட பின்னர் இவ்விடயத்தில் சுமந்திரனின் கருத்து என்ன என்று மாவை சேனாதிராஜா வினாவினார் எனத் தெரிகின்றது.

இவ்விடயத்தையோட்டி சம்பந்தன் ஐயா தமக்குக் கூறிய கருத்துக்களைச் சுமந்திரன் அப்போது விவரித்தார்.

”மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்களையும் நாம் இப்போதைக்குச் சம தூரத்திலேயே வைத்திருக்க வேண்டும். யாரோடும் நெருங்கத் தேவையில்லை. எங்களின் நிலைப்பாடு யாது என்பதை மூவருக்கும் நாம் தெரியப்படுத்தி விட்டோம். தேர்தல் தொடர்பான அவர்களின் அறிக்கைகள் வரட்டும். அவர்களின் கருத்து நிலைப்பாடுகளைக் கவனத்தில் எடுத்து, உரிய சமயத்தில் நாம் கூடி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம்.” – என்றார் சுமந்திரன். அதனை எல்லோரும் ஆமோதித்தனர் என அறியவந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.