செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு! – யாழில் ரணில் உறுதி

வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு! – யாழில் ரணில் உறுதி

3 minutes read
“போர் காரணமாக வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும். அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படும். அபிவிருத்திகளின் நன்மைகள் வடக்கு – கிழக்கு மக்களுக்கும் வழங்கப்படும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

“நான் அடிக்கடி யாழ். மாவட்டத்துக்கு வருகை தருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. உண்மையில் நான் இந்த முறை இங்கு வைத்தியசாலைகளை திறப்பதற்காக வந்தேன். நான் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையில் வந்துள்ளேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

நான் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன்.

யாழ்ப்பாணம் மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலைத் தேடும் நிலை காணப்படுகிறது. யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அநேகமான சாத்தியங்கள் உள்ளன.

யாழ். மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன.

எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல்போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகின்றேன்.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.

முன்னைய ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தையும் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை அண்மமையில் எமக்கு கிடைத்தது. இந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளின் தாய் அறிக்கையாகவும், இது தொடர்பான கடைசி ஆணைக்குழு அறிக்கையும் அதுவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக மற்றுமொரு ஆணைக்குழுவின் அவசியம் இல்லை.

காணாமல்போனோர் அலுவலகம் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதை அப்படியே செய்ய வேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான முழுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிகளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே, அதற்காக பணம் ஒதுக்க வேண்டும். அத்துடன் எது உண்மை, என்ன நடந்தது, நல்லிணக்கத்துக்காக நாம் என்ன செய்கின்றோம் என்ற கேள்விக்குறி காணப்படுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கொண்டு வருவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அதிகாரம் குறித்த பிரச்சினைகள் அதற்குள் காணப்படுகின்றன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் நடைமுறைப்படுத்தப்படும் நீதித்துறை அதிகாரங்கள் எமக்கு இருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதித்துறை அதிகாரங்களைச் செயற்படுத்தும் தனி நீதிமன்றம் வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு எமக்கு ஆதரவளித்த மூன்று தூதுவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு இரண்டு அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளேன்.

இதன் மூலம் பல பிரச்சினைகள் தீரும் என நம்புகின்றேன். எனவே, இது பற்றி கலந்துராயடி, சாத்தியமான தீர்வுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவோம் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தேன்.

அத்துடன், வடக்கு மாகாணம் அபிவிருத்திக்காகச் சாத்தியக்கூறுகளை அதிகமாகக் கொண்டிருக்கின்றது. இந்த மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பெருமளவில் உள்ளது. அதனால் யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய வலுசக்தி மையமாக கட்டியெழுப்ப முடியும். வடக்கு மாகாணத்தில் இந்த வலுசக்தியை நாம் இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனாலும், ஜிகாவொட்கள் அளவிலான வலுசக்தி இங்கு உள்ளது.

மேலும், நாட்டில் போட்டி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். வடக்கு மாகாணம் அதற்குள் முக்கியமான இடத்தை பிடிக்கின்றது. இங்குள்ள விவசாயிகளுக்கு அதற்கான திறன் உள்ளது. இதன் மூலம் வடக்கு மாகாண மக்களின் வருமான மட்டத்தை பாரியளவில் மேம்படுத்த முடியும்.

மேலும், கைத்தொழில்களைப் பொறுத்த வரையில் காங்கேசந்துறையில் முதலாவது முதலீட்டு வலயத்தை அமைப்பது குறித்தும், பின்னர் பரந்தன் மற்றும் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றோம். மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள தரைமார்க்க தொடர்பின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முழு வடக்கு மாகாணமும் புரட்சிகரமாக மாறும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வடக்கு மாகாணத்தை இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் சில நடனக் அம்சங்கள் இங்கு இடம்பெற்றன. அவர்களைப் பாராட்டுகின்றேன். அவர்களில் பெரும்பாலானோர் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று துணைவேந்தர் கூறினார். அதாவது 2002 மற்றும் 2003 இல் பிறந்தவர்கள். அவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும்.

அவர்களைத்தான் Gen Z என்று அழைக்கின்றோம். அவர்கள் தங்கள் எதிர்காலத்திலம் குறித்து அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதன் காரணமாகவே புதிய பொருளாதாரக் கட்டமைப்புக்குள் விரைவான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதையும் கூற வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More