செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டி | அருட்தந்தை மா.சத்திவேல்

சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டி | அருட்தந்தை மா.சத்திவேல்

3 minutes read

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அதன் தேசியம், சுயநிர்ணய உரிமை,சமஸ்டி தீர்வு எனும் தமிழர் அரசியல் மையக்கருத்தியலை 2009ம் ஆண்டுக்குப் பின்னரும் சயனைட் குப்பி போல் நெஞ்சில் /மனதில் சுமந்த அரசியல் வாழ்வை தமதாக்கிக் கொண்டோருக்கு தேர்தல் முடிவுகள் முள்ளிவாய்க்கால் வலியை கொடுத்துள்ளது.

போர்க்காலத்தில் பல்வேறு விதமான காட்டிக் கொடுப்புகளினால் அடைந்த தோல்விகள், பின்னடைவுகள், வீழ்ச்சிகள் என்பவற்றை சந்தித்தபோதும் மாவீரர் வாரமும் தமிழ் தேசிய நாளும் புத்தெழுச்சியை தந்தன. சவால்களை வென்று பயணிக்கும் திசை காட்டின என்பதிலே நம்பிக்கை வைத்து இவ்வருட மாவீரர் வாரத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதுவே எம் தேச எழுச்சியை மீள நிலை நிறுத்தும் ஏற்றும் சுடர் உள்ளங்களை புதுப்பிக்கும்.

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. தற்போதைய ஜனாதிபதியும் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வேட மக்கள் விடுதலை முன்னணியினரும் நடைபெற்று முடிந்த இரு தேர்தல் பிரச்சார காலங்களிலும் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்து விட்டனர்.எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை.

நல்லாட்சி காலத்தில் நாடாளுமன்ற கட்சிகளின் பங்களிப்போடு (தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்போடும்) தயாரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியையும் பௌத்த முன்னுரிமை கொண்ட அரசியல் யாப்பு முன்மொழிவினை மக்கள் கருத்தறிவு தேர்வு மூலம் நடைமுறையாக்குவதே இவர்களின் நோக்கம். இவ் வரைவு தமிழர்களின் அரசியல் தீர்வு அபிலாசைகளை மூழ்கடித்துவிடும். இதுவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக அமைந்துவிடும்.

இதனை கலந்துரையாட நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் போது தற்போது 3/2 பெரும்பான்மை கொண்டுள்ள சிங்கள தேசத்தின் திசை காட்டி வடக்கு கிழக்கு இணைய விடாத வகையிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத வகையிலும் அரசியல் சட்டமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளே தற்போது தென்படுகின்றன.இதற்கு தமிழ் தேசமாக ஜனநாயக ரீதியில் எம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த திரட்சி கொள்ளல் வேண்டும்.

இந்நிலையில் தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை,சமஸ்டி தீர்வு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து வாக்கு கேட்டவர்களும் அதற்கு வாக்களித்தவர்களும், தேசிய தலைவருக்கு சிலை வைப்போம் என்றவர்களும் கடந்த கால போலி வேசங்களை களைந்து தமிழருக்கு எதிரான அரசியல் துரோக செயல்களை கைவிட்டு; தெற்கின் அரசியல் அரசியலுக்கு விலை போகாது தமிழர் அரசியல் சார்பு எடுக்க வேண்டும். அதற்கான மன மருந்துக் காலமும் மனம் திருந்தும் காலமே தற்போதைய மாவீரர் வாரம்.

அதேபோன்று எமது சமூகத்தின் இன்னும் ஒரு பிரிவினர் அரசியல் வழி தவறி தமிழர் தேசத்தின் எழுச்சி நாட்களை எல்லாம் (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் தியாக தினம், மாவீரர் வாரம்) வருடம் ஒரு தடவை வரும் தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை நாட்களாக்கினர். அதற்கு அப்பால் ஆன அரசியல் பயணத்தை தவிர்த்துக் கொண்டவர்களும் உண்டு. வேறு பலர் திருவிழா கால வியாபாரிகள் போல உழைத்தவர்கள் உண்டு. இதுவும் அரசியல் துரோகமே. இவர்களும் மாவீரர் காட்டிய மற்றும் பயணித்த திசை நோக்க வேண்டும்.

அது மட்டுமல்ல தமிழர் தேச எழுச்சி நாட்கள் எமக்கு முன் நிறுத்தம் அரசியல் வழிதடத்தை சரியான வகையில் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துத்துவதில் கடந்த 15 வருடங்களாக தோல்வி கண்டுள்ளோம் என்பதை அரசியல் களச்சூழ்நிலையும் தேர்தல் முடிவுகளும் எமக்கு உணர்த்துகின்றன. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு கூறல் வேண்டும்.

ஆயுத யுத்தத்தை காணாதவர்களும் ஈர்த்த வழி சுமக்காதவர்களின் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சுகபோக கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களும் தமிழர் வரலாற்றை படிக்கவும் அதனின்று கற்றுக் கொள்ள ஆர்வமற்றவர்களும் தெற்கின் மாற்றத்தின் கவர்ச்சிக்குள் அடித்த செல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் மாவீரர் வாரம் எம் அரசியலுக்குள் உள்ளிழுக்கும் எனவும் நம்புகின்றோம். அரசியலுக்குள் நின்று நிலைப்பதற்கான வேலைத்திட்டங்களை தொடரத்தவரின் அது மாவீரருக்கும் தேசத்திற்கும் இழைக்கும் அரசியல் குற்றமாகும்.

தேசிய மக்கள் சக்தியினர் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளையும் தமதாக்கியே 3/2 தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இவர்கள் சிங்கள பௌத்த கருத்தியலையும் பெரும்பான்மை தேசிய வாதத்தையும் உடைத்து வெளியேறப் போவதில்லை. காரணம் முந்தைய ஆட்சியாளர்களைப் போல தசாப்தங்களை தாண்டியும் ஆட்சி தன் கையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதுவே இவர்களின் அரசியல் எதிர்பார்ப்புமாகும். இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வு என்பது எட்டா கனியே. இனி எவரும் தீபாவளிக்கு, பொங்கலுக்கு, புதுவருசத்துக்கு தீர்வு கிடைக்கும் என எம்மை ஏமாற்றவும் முடியாது.

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் உயிர் தியாக நாள் மாவீரன் வாரம் போன்ற தமிழர் தேச எழுச்சி நாட்களை பொலிசாரின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் நீதிமன்ற தடை உத்தரவுகள் குண்டர்களின் தாக்குதல் போன்றவற்றிற்கு முகம் கொடுத்தும் எழுச்சியோடு நினைவு கூர்ந்தோம்.

அதேபோன்று இவ்வருடமும் மாவீரர் நாளை எழுச்சியின் நாளாக்குவோம். தமிழ் தேசத்தை திரட்சி கொள்ளச் செய்வோம். அரசியல் நீக்கம் செய்து கொண்டவர்கள் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கவும், அரசியல் துரோகப் பாதையில் பயணித்தவர்கள் தமிழர்கள் தாயக தேசிய தலைவரின் திசை காட்டி பக்கம் திரும்பவும்,போட்டி அரசியலை தவிர்த்து குறுகிய அரசியலை நலன்களை கைவிட்டு தேச அரசியலுக்காக மாவீரர் வாரத்தில் உறுதியேற்றல் வேண்டும். அத்கைய தீர்மானத்தோடு மாவீரர் நாளில் சுடரேற்றுவோம். அது தேசத்தின் சுடராக அமையட்டும்.அதுவே மாவீரருக்கு நாம் செய்யும் கௌரவமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More