செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காரைதீவில் வெள்ளத்தில் சிக்கியோரில் இருவர் சடலங்களாக மீட்பு!

காரைதீவில் வெள்ளத்தில் சிக்கியோரில் இருவர் சடலங்களாக மீட்பு!

1 minutes read
அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன ஏனையோரைத் தேடும் பணி தொடர்கின்றது.

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கிக் காணாமல்போயிருந்த நிலையில் நேற்று மாலை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இருள் இரவு சூழ்ந்திருந்த போதிலும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை இன்று காலையும் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது. அதன்போது இரண்டு சடலங்கள் மீட்புப் பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவன் பாரூக் முஹம்மட் நாஸிக் (வயது 15) என்பவரும், இன்னுமொரு அடையாளம் தெரியாத ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியாளர்களினால் வெள்ளத்தில் காணாமல்போனவர்களைத் தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மீட்புப் பணியின்போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன் இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல்போனார்கள் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாத நிலை உள்ளது என்றும், குறைந்தது இன்னும் 5 அல்லது 6  பேராவது வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றிருக்கலாம் என்று அம்பாறை மாவட்ட அரச அதிபர் காரியாலய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று காலை அம்பாறை மாவட்ட  அரச அதிபர், மேலதிக அரச அதிபர், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர், கணக்காளர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், பொலிஸார் எனப் பலரும் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து துரிதல் கதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஸ்தலத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹீர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறித்த மீட்புப்  பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More