செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெருகலில் தொல்லியல் திணைக்களத்தால் நில அபகரிப்பு | மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

வெருகலில் தொல்லியல் திணைக்களத்தால் நில அபகரிப்பு | மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

3 minutes read

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பொதுமக்கள் இன்று  புதன்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெருகல் – வட்டவான் பகுதியில் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் அருகே கடந்த திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பெயர் பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொல்லியல் எனும் பெயரில் பௌத்தமயமாக்கல் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டவானின் தொல்லியல் பதாகை போடப்பட்டிருந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவனியாக சென்றனர். இதன்போது “தொல்லியல் திணைக்களமே புத்தர்சிலை வைக்க மாட்டோம் என்பதை உறுதிசெய்” “அநுரவின் ஆட்சியிலும் அபகரிப்பா?”, “அடுத்தது புத்தர் சிலையா? பௌத்த விகாரையா?”, “தொல்லியல் காணியில் விகாரை கட்டப்படாத இடம் உண்டா?”  போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் தமது பகுதியில் தொல்பொருளியல் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் இருப்பது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் ஆவணரீதியாக தெரியப்படுத்தப்படவில்லை.

தற்செயலாக முகநூல் வாயிலாகவே பெயர் பதாகை போடப்பட்ட விடயத்தை அறிந்து கொண்டேன். உடனடியாக அப்பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.

இதுதொடர்பாக சேருவில பிரதேசத்திற்கு பொறுப்பான தொல்லியல் பொறுப்பதிகாரி இன்று என்னை சந்தித்து இது தொடர்பில் முன்கூட்டியே தெரிவிக்காததையிட்டு வருத்தத்தை தெரிவித்ததுடன் பெயர் பதாகை போடப்பட்ட இடத்தில் இருந்து 1கிலோமீற்றர் தொலைவில் தொல்லியலுக்குரிய பகுதி இருப்பதாகவும் அதற்காகத்தான் குறித்த பதாகை போடப்பட்டதாகவும், அங்கிருக்கின்ற வயற்காணிகள் மற்றும் குடியிருப்புகள் எதற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்

குறித்த மகஜரில், இலங்கையின் தொல்பொருள்  திணைக்களத்தினால் வடக்கு  கிழக்கு  பிரதேசங்களில்  தொல்பொருள் இடங்கள் என  அடையாளப்படுத்தப்பட்ட பல இடங்களில் தற்போது  பௌத்த  விகாரைகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அதனை அண்டிய  பகுதிகளில் அத்துமீறிய சிங்கள  குடியேற்றங்களும்  இடம்பெற்றிருக்கின்றது.

உதாரணமாக  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள  குருந்தூர் மலை சிவன் ஆலயம், நீராவியடி விநாயகர் ஆலயம் தொடக்கம் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று, திரியாய் பகுதி, குச்சவெளி கரடிமலைப் பிள்ளையார் கோவில், செம்பிமலை ஆலயம், மூதூர் 64ம் கட்டை பகுதி மற்றும் எமது வெருகல் கல்லடி மலை நீலியம்மன் ஆலய வளாகம் போன்றவற்றினை குறிப்பிட முடியும் எனவும் இதனால் வெருகல் பிரதேசத்தில்  “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பௌத்த  விகாரைகள் அமைக்கப்பட்டு, பௌத்த மயமாக்கலுக்கான நடவடிக்கைகளை இலங்கை அரசின்  உரிய கட்டமைப்ப்பினர் மேற்கொள்ளக்கூடிய  நிலை உருவாகலாம் என அஞ்சுவதாகவும்,

எனவே இத்தொல்லியல் இடம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரதேச மக்கள் மத்தியில் காண்பிக்கப்படல் வேண்டும் எனவும் தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளோ, பௌத்த விகாரைகளோ, அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள மக்களுக்கான விவசாயக் காணிகள் எந்த சந்தர்பத்திலும் சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்திற்கு முரணாகவோ அரச கட்டமைப்புப் பொறிமுறைத் திணைக்களங்களால்  கையகப்படுத்தக் கூடாது எனவும் இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வெருகல் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டு உறுதிமொழி வழங்கப்பட வேண்டும். எனவும் கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More