கலைகள் இருக்கின்ற வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும். கலைகள் இல்லாமற்போனால் எமது பண்பாடும் கலாசாரமும் காலாவதியாகிவிடும். எனவே, கிராமத்துக் கலைகள் அந்தந்த கிராமிய கலைஞர்களால் உயிரூட்டப்பட்டு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றன. இது கிராமத்து மக்களின் கடமை என்று சொல்வதை விட தமிழ் மக்களுக்காக அவர்கள் ஆற்றுகின்ற உயர்ந்த பணியாக கருத முடியும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் பழுகாமம் கிராமத்தில் பாஞ்சாலி கலைக் கழகத்தினரால் இரண்டு தசாப்தங்களின் பின்னர் கிராமியக் கலையான “வள்ளிதினைப்புனம்” எனும் கரகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு சதங்கை அணி விழா கடந்த சனிக்கிழமை (04) நடைபெற்றது.
பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த கலைஞர் “கரகக்குரிசில்” வடிவேலின் நினைவாகவே “வள்ளிதினைப்புனம்” எனும் இக்கரகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு சதங்கை அணிவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓய்வுநிலை அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை ஓ.ஜெகநாதன் ஆசிரியர் நெறியாள்கை செய்திருந்தார்.
இந்நிகழ்வில் எம்.கேதீஸ்வரன் மத்தள அண்ணாவியாராகவும், என்.பாக்கியராசா சல்லரி அண்ணாவியாராகவும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கிராமத்து மக்கள்தான் இந்த கலைகளை அழியாமல் தொடர்ந்தும் பேணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கலைகளை பேணுவதன் மூலமாக தமிழின் இருப்பையும் அவர்கள் பேணி வருகின்றனர்.
தமிழர்களின் இருப்பில் ஒன்றாக காணப்படுவது தமிழர்களுடைய பண்பாட்டுக் கலைகளே என்பதை மறந்துவிட முடியாது.
அவ்வாறான பண்பாட்டுக் கலையினை பழுகாமத்து மண் மறந்துவிடாமல், 1966ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும் கலைகளை வளர்த்து வருகிறது.
தற்போது 2025ஆம் ஆண்டில் உற்று நோக்குகின்றபோது பல தசாப்தங்களை கடந்தும் இந்த மண்ணிலே கலைத்துவமும் கலைகளும் பதிந்துள்ளன. அது பழுகாமம் மண்ணுக்குரிய ஒரு உண்மையான தொண்டு என்று கூறலாம்.
பழுகாமம் கிராமத்தில் கலைகளை வளர்ப்பவர்கள், கலைஞர்கள், கலையை ரசிக்கும் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராமத்து மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.