புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெட்டத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்படும். அதுவரையில் நடைமுறையிலுள்ள மாகாணசபை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேபோன்றே பாராளுமன்ற தேர்தலின்போதும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினால் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தியில் பிரதான அங்கமாக திகழும் ஜே.வி.பி.யானது மாகாணசபை முறைமையையும் 13ஆவது திருத்தச் சட்டத்தையும் கடுமையாக எதிர்த்து வந்தது. இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே வழி வகுத்திருந்தது.
1987ஆம் ஆண்டு இந்திய– இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டு 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இயக்கமாக ஜே.வி.பி. விளங்கியது. தற்போது தேசிய மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ள ஜே.வி.பி. தமது கொள்கையில் சில மாறுதல்களை செய்திருக்கின்றது. இதனடிப்படையில்தான் புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் வரை மாகாணசபை முறைமையை தொடர்வதற்கு அந்தக்கட்சி இணங்கியிருக்கின்றது.
ஆனாலும் இன்னமும் பகிரங்கமாக 13ஆவது திருத்தத்தை ஆதரிக்கவோ அல்லது மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவது குறித்து பேசுவதற்கோ தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை. இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். இதன்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வெளிப்படையாக பேசப்படவில்லை.
பேச்சுவார்த்தையை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ, 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்த விடயங்களை கூட்டறிக்கையில் இடம்பெறச் செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்பவில்லையாம். இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்தே 13ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டறிக்கையில் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்ற விடயமும் தற்போது பகிரங்கமாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு காரணமாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடான சந்திப்பை அடுத்து இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை.
மாறாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் மோடி இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறு 13ஆவது திருத்தம், மாகாணசபை முறைமை என்பவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியானது இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எத்தகைய கொள்கையினை கடைப்பிடிக்கும் என்ற விடயத்தில் சந்தேகமான நிலைமையே உருவாகியிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்திருந்தாலும் அந்தத் தீர்வு எத்தகையதாக அமையும்? தமிழ் மக்களின் அபிலாஷைகளை அந்தத் தீர்வு நிறைவேற்றுமா? மாகாணசபை முறைமையை விட கூடிய அதிகாரங்களைக் கொண்டதாக தீர்வு அமையுமா? என பல்வேறு கேள்விகள் தற்போது எழுகின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அடிப்படையாக கொள்ளப்படுமே தவிர, அதுவே இறுதித்தீர்வு அல்ல என்பதை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ளவேண்டும். 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக உள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த வழிநடத்தல் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளது பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தக்குழுவில் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அங்கத்துவம் வகித்திருந்தார். இதன்போது தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு என்பன தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஒருமித்த நாட்டுக்குள் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெற முடியாத வகையிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இனப்பிரச்சினைக்கான இத்தகைய அரசியல் தீர்வை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடலில் ஒற்றையாட்சி என்ற பதத்தை விடுத்து ஒருமித்த நாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. இந்தக்காலப்பகுதியில் வழிநடத்தல் குழுவானது அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடியபோது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராகவும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்த மறைந்த இரா. சம்பந்தன் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு எப்படியாவது அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்று அவர் அக்கறை கொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு முன்னர் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம் என்று அவர் நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் இந்த முயற்சியானது அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக சாத்தியமற்றுப்போனது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியல் தீர்வு தொடர்பில் உடனடியாக பேசப்படவில்லை.
100நாள் திட்டம் வகுத்து பல்வேறு செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது,
இவ்வாறு பல்வேறு செயற்றிட்டங்கள் 100 நாட்களுக்குள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி காலம் தாழ்த்தியே ஆரம்பிக்கப்பட்டது. இதனால்தான் அதனை முழுமையாக முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை.
தற்போதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இலகுவாக கிடைத்திருக்கின்றது.இந்த மக்கள் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புக்கான முயற்சியானது உடனடியாகவே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சரவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான யோசனை மூன்று வருடங்களில் மக்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்தை அடுத்து அரசாங்கமானது உடனடியாக புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை எடுக்கப் போவதில்லை என்ற கருத்து நிலவியது.
ஆனாலும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் ஜனவரியில் ஆரம்பமாகும் என்று அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவது வழமையாகும். சகல மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு அமைய வேண்டியது அவசியமாகவுள்ளது. அதற்கேற்றவகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையில் உடனடியாகவே இறங்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.