இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பின் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான சமஷ்டித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணை செயலாளர் டிம் எண்டர்லின், தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னரான நிலைமைகள் புதிய அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டிருக்கின்றது. இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், சமஷ்டி அடிப்படையிலான தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றனர்.
“எம்மைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்த சட்டமும் மாகாணசபை முறைமையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற விடயமொன்றல்ல. இருப்பினும் அரசாங்கமானது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி அக்கட்டமைப்பை விணைத்திறான செயற்படுத்துவதற்கு இடமளிப்பதன் மூலமாக தங்களது அதிகாரப்பகிர்வுக்கான சமிஞ்சையை வெளிப்படுத்த முடியும் என்று கருதுகிறோம்” தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இந்த சந்திப்புக்கு முன்னராக கடந்த 4ஆம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேசியிருந்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என்று ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியிருக்கின்றனர்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என்று உறுதி வழங்கியதுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அதில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு உள்வாங்கப்படும். அதன் உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் போது தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இதுபற்றி நிச்சயமாக கலந்துரையாடப்படும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதனைவிட புதிய அரசியலமைப்பானது பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமையாது. மாறாக, இலங்கை எனும் ஒருமித்த நாட்டை முன்னிறுத்துவதாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரையில் 13ஆவது திருத்த சட்டமும் மாகாணசபை முறைமையும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அடுத்த வருடம் இறுதிப்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த விடயங்களிலிருந்து தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் சமஷ்டி தீர்வை கோருவதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பில் அது தொடர்பில் ஆராயப்படும் என்று கூறுவதும் நன்கு புலனாகின்றது.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால் அதற்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். இதனைவிடுத்து புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், அதன்போது அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடலாம் என்று அரசாங்கத்தரப்பு கூறுவதானது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகவே அமையும்.
அண்மையில் அமைச்சரவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,மூன்று வருடங்களின் பின்னர் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதிலிருந்து தற்போதைக்கு அரசியலமைப்பு குறித்தோ அரசியல் தீர்வு குறித்தோ அரசாங்கம் ஆராயப்போவதில்லை என்பது நன்கு தெளிவாகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அண்மையில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. மூன்று நான்கு மாதங்களுக்குபின்னரே அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியபோது புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் எப்போது நடைபெறும் என்றோ அல்லது அதற்கான கால எல்லை குறித்தோ அவர் எந்தவித கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை. ஆனாலும் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றே அவர் கூறியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியானது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே இந்த விடயத்தை தெரிவித்திருந்தது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அதுவரை மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முன்கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியானது 159 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அதேபோன்று தெற்கிலும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருக்கின்றனர்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியானது மூவின மக்களினதும் பேராதரவைப் பெற்றுள்ள நிலையில் பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள சூழலில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்பதும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதும் இலகுவான விடயமாகவே காணப்படுகின்றது.
இதனைவிட இன, மதவாதத்துக்கு தற்போது இடமில்லாத நிலைமை உருவாகியிருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியினர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்டோர் அரசியல்தீர்வுக்கு ஆதரவு வழங்குவதற்கு தயாராகவே உள்ளனர்.
எனவே காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களையும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையிலும் அரசாங்கம் உடனடியாக ஈடுபடவேண்டும்.
நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. தெற்கில் எதிரும் புதிருமான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தெற்கின் பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்த நிலையில் அரசியல் தீர்வை இலகுவாக கண்டிருக்க முடியும். ஆனாலும் அன்றைய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடான நிலைமை திடீர் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுத்தது. பின்னர் நீதிமன்றத்தின் மூலம் அந்த ஆட்சி அகற்றப்பட்டது. மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஆட்சியை பொறுப்பேற்றபோதிலும் அரசியல்தீர்வை காண்பதற்கு நிலைமை தவறிப்போனது.
தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் இடைநடுவில் கைவிடப்பட்ட இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து அரசியல் தீர்வைக் காணப்போவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆனால், அந்த முயற்சியானது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்து அரசியல் தீர்வு தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு அரசாங்கம் வரவேண்டும். தமிழ் தேசியக்கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேபோன்றே தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமக்குள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அரசியல்தீர்வு திட்டம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் உறுதியான முடிவை எடுக்கவேண்டும். அதனடிப்படையில் அரசாங்கத்தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். தற்போது அதற்கான பணியில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் ஈடுபடவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.