சீனி மோசடி தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினரும் சீனி இறக்குமதியின் போது வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.