அந்தி பொழுது… ஆதவன் அணையும் நேரம்… கடற்கரையில் மக்கள் எல்லோரும் கூடி மகிழ்ச்சியாய் இருக்கக்கூடிய தருணம். சூரியன் காலையிலிருந்து முயற்சி செய்து தன் இலக்கான மேற்கு திசையை இன்னும் கொஞ்ச நேரத்தில் அடைய போகிற சந்தோசத்தில் இருந்தது.. கடல் காற்று அப்படியே என் முடிகளை களைத்துக்கொண்டிருந்தது. நான் தனிமையில் நடந்துகொண்டிருந்தேன். என் மீது காதல் கொண்ட அலைகள், என்னை தொட்டு பார்க்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தது. அதை ஏமாற்ற விரும்பாத நான் என் கால்களை அந்த அலைகளில் நனைய செய்தேன். பிறகு நடக்க ஆரம்பித்தேன். செருப்பு ஈரமானதால், அதில் கடற்கரை மணல் ஒட்டிக்கொள்ள, அந்த மணலை செருப்பு என் மீது தூவி விட்டுக்கொண்டே வந்தது….
எங்கும் மக்கள் கூட்டம்…. ஒரு பக்கம், தேவை முடிந்ததும் படகுகள் என்னை போலவே தனிமையில் விடப்பட்டிருந்தன. கடல் மணலில் வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. ஒருநிமிடம் நடப்பதை நிறுத்திவிட்டு அங்கு அலைகள் நனைத்துவிட்டு செல்லும் மணலை பார்த்தேன். ஒரு நத்தை….மிக சிரமப்பட்டு கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.என் மனதிலோ ஆயிரம் என்ன ஓட்டங்கள்…. வானத்தை அண்ணாந்து பார்த்தேன். நிலா லேசான வெளிச்சத்தில் தெரிந்தது. அந்த நிலவை பார்த்ததும் எனக்கு அவள் நினைவுக்கு வந்தாள். அவளோடு சேர்த்து நான் மறக்க முடியாத அந்த நாளும் நினைவுக்கு வந்தது….. என் ஞாபகம் சற்று பின்னோக்கி நகர்ந்தது…..
அன்று ஒருநாள்……
அந்த திருமண மண்டபத்திற்கு நான் சென்றுகொண்டிருந்தேன். முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த திருமண பரிசை நான் எடுத்துக்கொள்ள மறக்கவில்லை….மண்டப வாசலில் சிலபெண்கள் பன்னீர் தெளித்துக்கொண்டிருந்தனர்….. மாப்பிள்ளை அமெரிக்காவில் டாக்டர் இல்லையா…. அதனால் மிக பிரமாண்டமான மண்டபம்….நான் உள்ளே சென்று முதல் வரிசையில் அமர்ந்துகொண்டேன். என்கையிலோ திருமண பரிசு…. அந்த மண்டபமே கோலாகலமாக இருந்தது….. ஐயர் வழக்கம் போல சொன்னார்…. பொண்ண அழச்சுண்டு வாங்கோ……
மணப்பெண்ணுக்கான அதே பாணியில் குனிந்த தலை நிமிராமல் அவள் வந்துகொண்டிருந்தாள். என் கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன….. மணவறையில் அமர்ந்த பின் மாப்பிள்ளை கைகளால் அவள் கழுத்துக்கு மாலை அணிவிக்கப்படுகிறது… எதேச்சையாக ஏறெதுட்டு பார்த்தவள் என்னை பார்த்துவிட்டாள்….. அதிர்ச்சி…. அது அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது…. .அவளின் குற்ற உணர்ச்சியை மீறி பொய்யான சிரிப்பை சிரிக்க அவள் முகம் முயர்சிசெய்தும் அவள் இதயம் ஒத்துழைக்கவில்லை….. என்னால் எதுவும் பிரச்சினை வந்துவிடுமோ என்பதே அவள் எண்ணம்…..
அந்த ஒருகணம் அவள் பேசிய வசனங்கள் நினைவில் வந்து கொண்டு இருந்தது…. எந்த ஒரு கஷ்டத்திலும் உங்களை விட்டு பிரியமாட்டேன் என்றாளே???? காதலித்த உங்களையே கரம்பிடிப்பேன் என்றெல்லாம் வசனம் பேசினாளே???ஆனால் இப்போது ஒரு டாக்டர் மாப்பிள்ளையாக கிடைத்ததும் அவள் இருதயத்திலிருந்து என்னையும், அவள் அலைபேசியிலிருந்து என் எண்ணையும் பிளாக் செய்துவிட்டாள்.காரணம் தேடி சென்ற என்னை, நான் ஒரு ஏழை என்பதை காரணம் காட்டி இனிமேல் என்னை பார்க்க வராதே… என்றாள்…. இப்போது வந்திருக்கிறேன் கடைசியாய் ஒருமுறை அவளை பார்த்துவிட்டு செல்ல…..
இப்போது மணப்பெண்ணாக அவள். இங்கு நடக்கும் இந்த கூத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவள் முன் இருந்த அந்த அக்னி கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது….. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது…. அவளுக்கு திருமணமாகி ஆறுமாதமாகி விட்டது. இப்படி ஒரு கதாபாத்திரம் அவள் வாழ்க்கையில் வந்ததையே அவள் மறந்துவிட்டிருப்பாள். ஆனால் என்னால் அவள் கொடுத்த அந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. தாங்க முடியாத ஏமாற்றம்.
இந்த பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டே கடலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏறெடுத்துப்பார்த்தேன்…. கடலும் வானமும் ஒன்றாய் சேர்ந்ததை போன்ற ஒரு பொய்யான காட்சியை என் கண்களுக்கு காட்டி இயற்க்கை கூட என்னை ஏமாற்ற முயற்சிசெய்து கொண்டிருந்தது…
நிறைவு…
நன்றி : முஹம்மது இனியாஸ் | எழுத்து.காம்