செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15| மகாலிங்கம் பத்மநாபன்

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15| மகாலிங்கம் பத்மநாபன்

6 minutes read

 

ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக ஒரு விஞ்ஞானிக்குப் பரிசில்கள் பலவழங்கினார்களாம். பின்னர் அவ்விஞ்ஞானி கண்டுபிடித்தது பிழை என நிரூபித்து அதே விஞ்ஞானியின் மாணவன் பரிசுகள் பெற்றானாம். காலங்களுக்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் சட்டதிட்டங்களும் மாற்றமடைகின்றன.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக பெரிய பிரித்தானியா விளங்கிய போது வல்வெட்டித்துறை மாலுமிகள் இந்தியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களுக்கெல்லாம் கப்பலோட்டி பட்டுப்புடவைகளையும் தங்க நகைகளையும் வியாபாரம் செய்து வந்தனர். ஒரு வல்வெட்டித்துறை மாலுமி புதிதாக ஒரு கப்பலைக்கட்டி அமெரிக்கா போய்ச்சேர்ந்ததை சாதனையாகப் புகழ்ந்து உலகப் பத்திரிகைகள் முழுவதும் படத்துடன் செய்தி வெளியிட்டன.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர் அதே வல்வெட்டித்துறை மாலுமிகள் பட்டுப்புடவைகளையும் தங்க ஆபரணங்களையும் இலங்கை, இந்தியா, பர்மா, சிங்கபூர், மலேசியாவிற்கு வியாபாரத்தின் பொருட்டுக் கொண்டு சென்றதைக் கடத்தல் என்று பெயரிட்டுக் கைது செய்து தண்டித்தார்கள்.

இப்போது அண்மையில் மாலுமிகள் இலங்கையிலிருந்து அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடாவிற்கு கப்பலில் ஆட்களுடன் சென்றபோது அது ஆள்கடத்தல் குற்றமென்று கைது செய்து அதைப்படங்களுடன் பத்திரிகையில் செய்தி போடுகின்றார்கள்.

 

நெல்கடத்தல்

ஆண்டாண்டு காலமாக வன்னியில் விளைந்த நெல், வண்டில்கள், தோணிகள், ராக்டர்கள், லொறிகள், புகைவண்டி மூலம் குடாநாட்டிற்கே அனுப்பப்பட்டது. ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபதுகளில் ஒரு முறை வரட்சி ஏற்பட்டது. தென் இலங்கையில் அரிசி விலை அதிவேகமாக உயர்ந்தது.  அரிசி விலையை ஓரளவு கட்டுப்படுத்த எண்ணிய அரசு குடாநாட்டிற்கு நெல்லு கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தச் சட்டம் கொண்டு வந்தது.

இப்போது யாழ் – கண்டி வீதியில் (A9 ) கார், லொறி, பஸ் முதலியனவும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைவரை புகைவண்டியும் ஓடியதால் மூன்று கிராமமக்களும் அவற்றைப்பயன்படுத்தப் பழகிவிட்டனர். மூன்று கிராமமக்களுக்கும் சுட்டதீவிற்குமிடைப்பட்ட பாதை புதர் மண்டிவிட்டது. தோணிகளும் சுட்டத்தீவுத்துறையிலிருந்து மறைந்து விட்டன. வண்டில்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.

அரசில் இருக்கும் அதிகாரிகளில் பெருந்தொகையானவர்கள் நேர்மையானவர்களாகவும் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படித்தவர்களாகவும் இருப்பர். ஆனால் அங்கேயும் இங்கேயுமாகச் சில புல்லுருவிகளும் தோன்றிவிடுவதுண்டு.

நெல் கொண்டு செல்வதிலுள்ள கட்டுபாட்டைத் தமது சட்டப்பையை நிரப்பிக் கொள்ள ஒரு இடைநிலைப் பாதுகாப்பு அதிகாரி பயன்படுத்திக் கொண்டதாக மக்கள் பலரும் கதைப்பதை யானும் கேட்டிருக்கின்றேன். அவரின் அடையாளமோ, பெயர் விபரமோ எனக்குத் தெரியாது. லொறி நிரம்ப நெல் ஏற்றப்படுமாம். இந்த அதிகாரி லொறியின் முன் சீற்றில் ஏறிக் கொள்வாராம். அவரது ‘ஜீப்’ வண்டி லொறியின் பின்னால் செல்லுமாம். ஆனையிறவு பரியலில் (barrier) அவரைக் கண்டதும் கடமையிலிருக்கும் பொலிசார் எழுந்து நின்று ‘சலூட்’ அடிப்பார்களாம். அந்த இடைநிலை அதிகாரி இயக்கச்சியில் இறங்கிக் கொள்வாராம். லொறி நெல்லுடன் குடாநாட்டிற்குச் செல்ல அதிகாரி தமது ஜீப்பில் ஏறித்திரும்பிச் செல்வாராம். இது வதந்தியாகக் கூட இருக்கலாம்.

paddy_edited-650x430

நெல் கொண்டு செல்வதிலுள்ள கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள மூன்று கிராம மக்களும் குமரபுர மக்களும் தீர்மானித்தனர் தமது நெல்லை அவித்துக் குற்றி அரசியாக்கினார்கள். சிறு சிறு பைகளில் கட்டிச் சைக்கிளில் கட்டி ஏற்றிப் பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலிருந்த புதர்க் காடுகளுக்குக் கொண்டுசென்று காத்திருப்பார்கள். குடாநாட்டிலிருந்து அரிசி வாங்கவந்தவர்கள் புகையிரதப் பயணத்திற்கான சீட்டைப் பெற்ற பின் பதுங்கிப் பதுங்கி இப்புதர் காடுகளுக்குச் செல்வர். அரிசியைக் கொள்வனவு செய்து ரயில்வண்டி வரும்வரை காத்திருப்பர். ரயில்வண்டி பரந்தனில் நின்றுவிட்டுப் புறப்படும் தருணத்தில் தத்தம் சிறு மூட்டைகளுடன் ஓடிச்சென்று ரயில்வண்டியில் ஏறிவிடுவர். ஏறமுடியாது தவிக்கும் வயோதிபர்களையும் பெண்களையும் ரயில் வண்டியில் வரும் பிரயாணிகள் கைகளைப் பிடித்துத் தூக்கி விடுவர். ஏறப் பிந்தியவர் இனி மறுநாள்தான் பயணம் செய்யலாம். பரந்தனில் இருந்து புறப்படும் புகையிரதம் அடுத்து பளையில்தான் நிற்கும். ஆனையிறவு பரியரைத் தாண்டி விடும்.

இடையிலுள்ள காலத்தில் மிகவும் நலிந்திருந்த குஞ்சுப்பரந்தன், பெரியபரந்தன், செருக்கன் மக்களும் நெல்லை வாங்கி, அவித்துக்குத்தி, அரிசியாக்கி விற்பனை செய்ததால் அவர்களின் பொருளாதாரம்; மீண்டும் நிமிர்ந்தது. சிலர் தாமே அரிசியை ரெயிலில் ஏற்றி மீசாலைக்குக் கொண்டுசென்று விற்றுவிட்டு மீண்டும் வந்தனர். குடாநாட்டு மக்களும் வன்னி மக்களும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள். ஆனபடியால் இதை ஒரு குற்றமாகவோ, சட்டத்திற்கு மாறானதாகவே கருதவில்லை. தமது சகோதரர்களின் வயிற்றுப்பசியையும் தீர்த்துக் கொண்டு தாமும் கையில் நாலு காசு பார்க்கலாம் என்றே கருதினர்.

குமரபுரம் மக்கள் நெல்லை அவித்துக்குற்றி வீட்டில்வைத்துக் கொண்டு காத்திருந்தனர். குடாநாட்டின் நாலாபக்கத்திலிருந்தும் மக்கள் வீடுதேடிவந்து அரிசியை வாங்கிக் கொண்டு போனார்கள்.

அதிகாரிகள் புகைவண்டியை இடையில் நிறுத்;திச் சோதித்தபோது மக்களும் நாலுதிக்கிலும் இறங்கி ஓடி விடுவார்கள். பிடிப்பட்டவர்களையும் அவர்களது ஏழ்மையையும் சாப்பாட்டிற்கே கொண்டு செல்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டு எச்சரித்து விடுவித்தனர். புகைவண்டியை இடையில் நிறுத்துவதனால் நேரஅட்டவணையில் ஏற்படும் சிக்கல்களை  புகையிரதப் பகுதி அதிகாரிகள் விளக்கிக் கூறியதால் அதிகாரிகளால் தொடர்ந்து புகைவண்டியை இடையில் நிறுத்த முடியவில்லை.

திடீரென திரும்பவும் சுட்டத்தீவுத்துறையில் தோணிகளினது நடமாட்டம் அதிகரித்தது. மூன்று கிராமங்களுக்கும் சுட்டதீவுக்கும் இடைப்பட்ட பாதையில் வண்டிகளின் போக்குவரத்து காணப்பட்டது.  ராக்டர்களின் இரைச்சல் இடையறாது கேட்டது. மூன்று கிராமமக்களினாலும் அயற்கிராம மக்களினதும் அரிசி குடாநாட்டு மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு குடாநாட்டிற்கு அனுப்பப்பட்டது. மூன்று கிராமமக்களில் ஒருவர் கூட தவறாது அரிசி வியாபாரம் செய்தமையால் ஒருவரும் அங்கு நடைபெறும் விடயங்களை அதிகாரிகளுக்கு அறிவிக்க வில்லை இவர்களின் அரிசியும் நெல்லும் குடாநாட்டு வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வியாபாரிகளின் தகுதிக்கேற்ப வண்டிகளிலோ ராக்டர்களிலோ ஏற்றப்பட்டு சுட்டதீவுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து தோணிகளில் கச்சாய் துறைக்குக் கொண்டு செல்லப்படும். நெல் சுட்டதீவினூடாக கடத்தப்பட தொடங்கியதும் அனுமதி பத்திரம் பெற்று லொறிகளிலேற்றுவோரின் தொகை குறைந்தது. அனுமதி பத்திரம் பெற்று நெல் ஏற்றுவோரின் தொகை குறைந்ததையடுத்து, அதிகாரிகள் அதன் காரணத்தை ஆராயத் தலைப்பட்டனர். வழமையாக நெல் கடத்தச் சிறு சிறு வள்ளங்களையே பயன்படுத்துவார்கள்.

aq

கொடிகாமத்தில் கார் வைத்து ஓடிப் பிழைத்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு முன்னும்பின்னுமாக நான்கு சகோதரிகள். வாடகைக்கு கார் ஓட்டி அவர்களைக் கரைசேர்க்க முடியாது என்று கலங்கியவனுக்குச் சுட்டத்தீவினூடாக நெல் கடத்தல் மூலம் இலகுவாக பணப் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டாதனது. தனது காரை விற்று நெல் வியாபாரம் செய்யத் துணிந்தான். அவனது தாய், சகோதரிகள் நண்பர்கள் தடுத்தும் கேளாது காரை விற்றுவிட்டான். பேராசை பெரும்தரித்திரம் அல்லவா? மிகப்பெரிய வள்ளம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். மூன்று கிராமத்திற்கு சென்று நெல் கொள்வனவு செய்துக் கொண்டு வந்து தனது வள்ளத்தில் ஏற்றிக்கொண்டிருந்தான். பாவியார் போகும் இடம் பள்ளமும் திட்டியும் என்பார்கள் அரசினரிடம் அனுமதிப்பத்திரம் பெற்று நெல் ஏற்றும் லொறிகளின் தொகை குறைந்தமைக்கான காரணத்தை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகளின் ஜீப் வண்டிகள் சுட்டதீவைநோக்கி விரைந்தன. மாரிகாலத்தில் காட்டுவெள்ளம் பெருக்கெடுத்து ஆனையிறவுக் கடலில் சேரும். அப்போது கடற்கரையில் நீர் அரித்துப்பாய்வதால் அருவிகள் போன்ற அமைப்பு இயற்கையாக ஏற்படும். காலப்போக்கில் இவ்வருவிகளின்; இருபக்கங்களிலும் மரங்கள், செடிகள், கொடிகள், பற்றைகள் வளர்ந்து மேல்பகுதிளை மூடிவிட இவ்வருவிகள் நீரின்மேல் அமைக்கப்பட்ட பங்கர்  போல மாறிவிடும். சிறுதோணிக்காரர்கள் ஆபத்து ஏற்படும் போது தமது தோணிகளை இந்த மறைவான இடத்தில் ஒழித்து விடுவார்கள் அத்தோணிகளை கரையில் நின்று கண்டுபிடிக்க முடியாது. போட்டில் கடலிற்குள் இறங்கினால் ஒரு சிலர் அகப்பட்டுவிடுவர். பாதுகாப்பு அதிகாரிகள் போட்டில் வருவது குறைவு தரை வழியே  ஜீப்பில் வருவார்கள். சிறுதோணிக்காரர் ஓடி மறைந்து விடுவர்.

கொடிகாமத்தின் இளைஞன் அனுபவம் குறைந்தவன். பெரிய தோணியில் வந்ததனால், தோணி அரைவாசி நிரம்பியபடி மிகுதி நெல்மூட்டைகள் கரையில். சிறு தோணிக்காரர்களைப் போல அவனால் ஓடி ஒழிக்க முடியவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டான். நெல்மூட்டைகள் யாவும் பெரியபரந்தன் பாடசாலைக்கு அருகாமைக்கு கொண்டுவரப்பட்டன. பெரிய தோணிக்கு இரு அதிகாரிகள் காவல், நெல் மூட்டைகளுக்கு இரண்டு அதிகாரிகள் காவல். இளைஞன் மூத்த அதிகாரியினால் விசாரிக்கப்பட்டான். அவர் இளகிய மனம் படைத்தவர் அந்த மாத இறுதியில் ஓய்வுபெற இருந்தவர். மேலதிகாரிகளின் பணிப்பின் பேரில் நெல் கடத்தலை தடுக்க வந்தவர். அந்த கொடிகாமத்து இளைஞனை மிகவும் மனிதாபிமானத்துடன் விசாரணை செய்தார்.

அந்த இளைஞன் கார் விற்ற காசில் அரைவாசியை செலவளித்துவிட்டான். விரக்தியுற்ற அவன் மிகுதிக்காசையும் அதிகாரியின் மேல் எறிந்து “இதையும் கொண்டுபோ” என்று கூறி துயரில் அழத் தொடங்கினான். அந்த அதிகாரி பொறுமையுடன் காசை எடுத்து அந்த இளைஞனுடன் கூட வந்த உறவினரிடம் கொடுத்து “இந்தக் காசுடன் நீயும் தப்பிப்போ. இவனைப் பிணையெடுக்க நடவடிக்கை எடு” என்று கூறி அவனை தப்பவிட்டார். அந்த காசை ‘கோட்டில் (Court) சமர்பித்தால் அதுவும் அவனுக்கு எதிரான சாட்சியாக மாறிவிடுமே என்று இரக்கம் கொண்டார். நெல் மூட்டைகளுக்கு காவலாக இருந்த அதிகாரிகள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மூட்டையாய் விற்று தமது கள், உணவு போன்ற தேவைகளை பூர்த்தி செய்தனர். இரு நாட்களின் பின் வந்த மூத்த அதிகாரி “ நெல் குறைந்து காணப்படுகின்றதே” என்று  வினாவ “ அது சேதாரமாய் போய்விட்டது” என்று காவலில் இருந்தவர்கள் பொய்யுரைத்தனர். அதற்கு அந்த மூத்த அதிகாரி “அடேய் நெல் சேதாரம் அடையலாம். சாக்கு எப்படி சேதாரம் அடையும்” என்று அவர்களை பேசிவிட்டு நெல்லை கூட்டுறவு சங்கத்தினரிடம் விற்றுக் காசை கோட்டில் கட்டி  விட்டார். கொடிகாமத்தில் காரோட்டும் ஏனைய நண்பர்கள்  வந்து அந்த இளைஞனைப் பிணை எடுத்ததாக அறிந்தேன். வழக்கில் என்ன நடந்தது? அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டானா? நெல் விற்ற காசை மீளப்பெற்றானா? அவன் வாடகைக்கு எடுத்த தோணி என்னாயிற்று? அவனது சகோதரிகள் கரைசேர்ந்தார்களா? எதையும் நான் அறியவில்லை ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் என் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது. அதை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.

 

 

தொடரும்…

 

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-11/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-12/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-13/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-14/

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More