செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!

5 minutes read

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் உள்ள லாட்ஜில் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அதேநேரத்தில், பள்ளியில் நடத்திய அதிரடி சோதனையில் அந்தரங்க அறையில் இருந்து வழக்கு தொடர்பாக 4 லேப்டாப்கள், 2 கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் 20 ஆண்டுகளாக ‘சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி’ இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனராக பிரபல டான்ஸ் சாமியாரான சிவசங்கர் பாபா (72) உள்ளார். இவர் மீது அப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு ஆசிர்வாதம் வழங்குவதாக கூறி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தரங்க அறைக்கு அழைத்து ெசன்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் பலர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் 8 முதல் 12ம் வகுப்பு மாணவிகளை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இதுபோல் கடந்த 15 ஆண்டுகளாக சிவசங்கர் பாபா பள்ளியில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  கடந்த 9ம் தேதி 3 தனித்தனி வழக்குகளில் சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 இந்த வழக்கில் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகளின் பாலியல் வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு கடந்த 13ம் தேதி மாற்றி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து, முறைப்படி சிபிசிஐடி போலீசார் கடந்த 14ம் தேதி சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர் உத்தரவுப்படி எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் டிஎஸ்பி குணவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணை தொடங்கினர்.
அதில், சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வரும் பாரதி, தீபா ஆகியோர் கட்டாயப்படுத்தி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ஆசைக்கு இரையாக்கியது மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வரும் பாரதி மற்றும் தீபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  தனிப்படை போலீசார் 14ம் தேதியே விசாரணையை தொடங்கியபோது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் செல்போனை கையில் வைத்திருக்கவில்லை. அவர் அதை பயன்படுத்துவதும் இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கமானவர்கள் யார், யார் என்று விசாரித்தனர். அப்போது அவர் டெல்லியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை அடிக்கடி தொடர்பு கொள்வார் என்று மட்டும் தெரியவந்தது. இதனால், தனிப்படை போலீசார் பக்தர்கள் வேடத்தில், டெல்லியில் உள்ள சீனிவாசனை தொடர்பு கொண்டு, பாபாவை பார்க்க வேண்டும். அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மாறுவேடத்தில் வந்த போலீசாரை, உண்மையான பக்தர்கள் என்று நம்பிய சீனிவாசன், சிவசங்கர் பாபா, ஆன்மிக பயணமாக டெல்லி வந்து, ஹரித்துவார் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்தபோது அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.  இதனால், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள மேக்ஸ் என்ற மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்த்தோம். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் 3 ஸ்டென்ட் வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சையில் இருக்கிறார் என்று தெரிவித்தார். இதனால் தனிப்படை போலீசார் சீனிவாசனுடன் பக்தர்கள் வேடத்தில் டேராடூன் சென்றனர். அங்கு மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் 12ம் தேதியே மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9ம் தேதிதான், மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் டான்ஸ் சாமியாருக்கு தெரிந்ததால் 12ம் தேதி தப்பி விட்டார் என்று தெரிந்தது. இ்்ந்நிலையில், டேராடூன் கலெக்டர் ரவி, எஸ்பி செந்தில் (இருவரும் தமிழர்கள்) ஆகியோர் உதவியுடன் ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அவர் சிக்கவில்லை. இதற்கிடையில் டெல்லி வந்த சிபிசிஐடி போலீசார் மீண்டும் சீனிவாசனை தொடர்பு கொண்டனர். சாமியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போதுதான், டேராடூனில் இருந்து தப்பி வந்த சாமியார் சீனிவாசனை சந்தித்து டெல்லியில் பதுங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், இதனால் டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் சாலையில் உள்ள மயூர் என்ற லாட்ஜில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சித்தரஞ்சன் பார்க் போலீசார் உதவியுடன் லாட்ஜூக்கு சென்று சுற்றிவளைத்தனர். அவர் தங்கியிருந்த 9ம் எண் கொண்ட அறைக்குச் சென்றபோது, போலீசாரைப் பார்த்து அதிர்ந்தார்.  தாங்கள் போலீஸ் என்றதும், சத்தம்போடாமல், ‘நீங்கள் அழைக்கும் இடத்துக்கு வருகிறேன்’ என்று சாமியார் தெரிவித்தார். அப்போதுதான் பக்தர்கள் வேடத்தில் வந்தது, சிபிசிஐடி போலீசார் என்று சீனிவாசனுக்கு தெரியவந்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி 48 மணி நேரத்தில், சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி. விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் சித்தரஞ்சன் சாலை போலீஸ் நிலையத்துக்கு சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவருக்கு அரசு டாக்டர்கள் உடல் தகுதி சான்று தர மறுத்தனர்.

இதனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்றனர். பின்னர் ேநற்று பிற்பகல் 3 மணிக்கு  டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் இடைக்கால வாரண்ட் பெற்று ேநற்று இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு நள்ளிரவு அழைத்து வந்தனர்.  பின்னர் அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்கல்பட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுசில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 இதற்கிடையே, சிவசங்கர் பாபாவால் மாணவிகள் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் கோமதி, வளர்மதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தியது. 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில், பள்ளி வளாகத்தில் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு ஆசிர்வாதம் செய்வதற்காக நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக அமைக்கப்பட்ட அந்தரங்க அறையை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். அதைதொடர்ந்து சிவசங்கர் பாபாவின் அந்தரங்க அறையை சோதனை செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு பள்ளி நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் அனுமதி அளித்தனர்.  

சிவங்கர் பாபாவின் அந்தரங்க அறைக்குகள் சிபிசிஐடி போலீசார் சென்று பார்த்த போது, சகல வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அறைக்குள் இருந்து வெளியில் யார் வருகிறார்கள்  என்று பார்க்க முடியும் ஆனால் அறைக்கு முன்பு இருப்பவர்கள் அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாது.  அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிசிடிவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

 பின்னர் சிவசங்கர் பாபாவின் அந்தரங்க அறையில் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையின் கீழ் பகுதியில் இருந்து சிவசங்கர் பாபா பயன்படுத்தி வந்த 4 லேப்டாப்கள் மற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்டாப்களில் சிவசங்கர் பாபா நிர்வாண நிலையில் மாணவிகள் மற்றும் தொழிலதிபர்கள் மனைவிகளுடன் ஆனந்த நடனம் ஆடிய வீடியோக்கள், நிர்வாண நிலையில் மாணவிகள் சிவசங்கர் பாபாவின் உடலை மசாஜ் செய்யும் வீடியோக்கள் பல இருந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் இருந்து தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றப்பட்ட பல கோடி ரூபாய்க்கான ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சோதனை முடிவில் சிவசங்கர் பாபாவின் அந்தரங்க அறை மற்றும் அவர் பயன்படுத்தி வந்த ஆசிரமத்தை சிபிசிஐடி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணைக்காக சீல் வைத்து தற்காலிகமாக மூடினர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபாவை 48 மணி நேரத்தில் கைது செய்த சிபிசிஐடி எஸ்பி. விஜயகுமார் தலைமையிலான  தனிப்படையினரை டிஜிபிக்கள் திரிபாதி, சகீல் அக்தர் ஆகியோர் அழைத்து பாராட்டினர்.   

* சிவசங்கர் பாபாவின் அறைக்குள் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டதில், மாணவிகளுக்கு ஆசீர்வாதம் செய்ய நட்சத்திர ஓட்டலுக்கு இணையான அந்தரங்க அறை இருந்தது.


* டேராடூனில் இருந்து தப்பி வந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் உள்ள மயூர் லாட்ஜில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர்.


* சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கிய 48 மணி நேரத்தில் சிவசங்கர் பாபாவை கைது செய்துள்ளனர்.

* லேப்டாப்களில் சிவசங்கர் பாபா நிர்வாண நிலையில் மாணவிகள் மற்றும்  தொழிலதிபர்கள் மனைவிகளுடன் ஆனந்த நடனம் ஆடிய வீடியோக்களும் மாணவிகள் சிவசங்கர் பாபாவின் உடலை மசாஜ் செய்யும் வீடியோக்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More