ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
அப்போது தொடங்கி இப்போது வரை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி தரும் விதமாக அண்மையில் அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோனை பயங்கரவாதிகள் தூதரக கட்டிடத்துக்கு மேலே பறக்க விட்டனர்.
எனினும் அமெரிக்க தூதரகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அபாய ஒலியை எழுப்பி இதுகுறித்து எச்சரித்தது. அதனை தொடர்ந்து தூதரகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.