0
கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு: தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன.இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போர் பற்றி நிலவும் உணர்வுகளை மோசமாக சித்தரித்துள்ளனர்.
கத்தி படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, லைக்கா புரடக் ஷன்ஸ் சுபாஷ் கரண் தயாரிக்கின்றனர். இதில், இலங்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள், கணவர்களுடன் அமைதியாக வாழ்கின்றனர்; தமிழர், சிங்களர் ரத்தக் கலப்பில் புதிய இனம் உருவாவதுபோல் சித்தரித்துள்ளனர். புலிப்பார்வை படத்தை வேந்தர் மூவீஸ் மூலம் லைக்கா புரடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது குறித்து, மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால், சீன ராணுவம் கொன்றதுபோல் படமாக்கியுள்ளனர். இவற்றில் பாதி கற்பனையே.இரு படங்களிலும் தமிழர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். இப்படங்கள் வெளியானால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். திரைப்பட தணிக்கைக்குழுவின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக, இரு படங்களையும் உருவாக்கியுள்ளனர். கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி என்.கிருபாகரன் முன் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.