“காவ்யா… உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா… வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்….” காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.
“அம்மா… அவள் பணக்கார வீட்டு பிள்ளை. அதிலும் செல்லமாவே வளர்ந்தவள்… கொஞ்சநேரம் நித்திரை கொள்ளட்டும். விடும்மா… நேற்று இரவு தானே வந்தவள். அலுப்பாக இருக்கும்லமா” என்றுவிட்டு அறையினுள் சென்றவள்…
“அனு… அனு…” அவளது நண்பியை தட்டி எழுப்பினாள்
“ம்…. என்ன…” அனுக்ஷா
“எழும்படி தூங்கு மூஞ்சி. வருசபிறப்பும் அதுவும்மா தூங்குறியா… அங்க அம்மா கத்துறாடி. எழும்பி குளி… போ…”
“இன்னும் கொஞ்ச நேரம்டி… ப்ளீஸ்…”
“இன்னும் கொஞ்ச நேரத்தில எங்க அம்மாவே வந்திடுவாங்க… அவங்ககிட்ட சொல்லிக்க…”
“ஐயோ வேண்டாம்.” எழுந்து குளிக்க சென்றாள்.
கிணற்றடிக்கு சென்றவள் “காவ்யா…” என்றவாறு ஓடி வந்தாள்.
“என்னடி… குளிக்கலையா…?”
“காவ்யா… கிணற்றில அள்ளியெல்லாம் பழக்கம் இல்லடி… நீ வா. அள்ளித்தா… செல்லம்ல… ப்ளீஸ் டா” அனு கெஞ்சினாள்
“சரி.. சரி… வா…” என சிரித்தவாறே அழைத்துச் சென்றாள்.
“உனக்கு அப்பவே சொன்னான். இங்க உனக்கு கஷ்டம் என்று. கேட்டாத்தானே… முதல் நாளே இப்பிடி என்றால் இன்னும் நான்கு நாட்கள் எப்பிடி சமாளிப்பாய். பேசாம நாளைக்கே உங்க வீட்டுக்கு கிளம்புடி. கஷ்டப்படாத. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லை பண்ணிடுவாங்க….” – காவ்யா
“அதெல்லாம் ஒன்றுமில்லை. நானும் பழகத்தானே வேணும்… வாழப்போற வீட்டில எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாதுல… ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகிடும்…” அனு கூறினாள்.
“புடிக்கிற கொப்ப புளியங் கொப்பா பார்த்து புடிச்சுக்க…. ” காவ்யா சொல்லவும் அனு மனசுக்குள் சிரிச்சுக் கொண்டாள்.
காவ்யா தண்ணி இறைச்சுக் கொடுக்க அனு குளித்தாள். இடையில் ஓரிரு தடவைகள் அனுவும் தண்ணி இறைச்சு பழகினாள். ஆனாலும் கையில் கயிறு வெட்டிவிட பல்லைக் கடிச்சுக் கொண்டு சமாளிச்சுக் கொண்டாள்.
கோவிலுக்கு போவதற்காக டெனிம் ஜீன்சும் டீ ஷர்ட் உம் அணிந்து கொண்டு வெளியே வந்தாள் அனு.
“என்னமா… ஷாப்பிங் போறிங்கலாமா…” காவ்யாவின் தாய் கேட்க
“இல்லை ஆன்டி. கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு…” என இழுக்க
“இப்பிடியேவா… ரோட்டில நிற்கிற நாயெல்லாம் துரத்தும்.பரவலையா…”
“அங்க நாங்க இப்பிடித்தான் ஆன்டி…” முடிக்க முன்னர்
“கொழும்பில இது ஓகே பிள்ளை. இங்க சரிவராதுமா… எங்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்குல. போயி பஞ்சாபி சரி பாவாடை சட்டை சரி போட்டுடு வாம்மா…”
“சரி ஆன்டி.” என்றுவிட்டு உள்ளே சென்றவள் சேலையில் வந்தாள்.
“அம்மாடியோவ்… அந்த மஹாலக்ஷ்மியே நேரில வந்த மாதிரி இருக்கு… என்ர கண்ணே பட்டிடும் போல இருக்கு…” என்றவாறு அவளுக்கு திருஷ்டி சுற்றினார்.
அனு வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டு நின்றாள்.
“சேலை அணிந்ததுமே வெட்கம் எல்லாம் வந்திடுசுல…” என காவ்யா கிண்டல் பண்ண.
“பாருமா… எவ்வளவு அழகா இருகிறாய் என்று. இதைவிட்டுடு அந்த கண்றாவியெல்லாம் எதுக்குமா போடுறாய்…” காவியாவின் தாய் கூற
“மன்னிச்சுடுங்க ஆன்டி. இனிமேல் நா போட மாட்டன்.”
“இல்லைமா. கொழும்பில போட்டுக்க. அங்கத்தைய வாழ்க்கை முறைக்கு அதுதான் வசதியா இருக்கும். இங்க வரும் பொழுது தவிர்த்துக்கோ.”
“சரி ஆன்டி”
“காவ்யா… பார்த்து கூட்டிடு போயிட்டு வா. சீக்கிரம் வந்திடனும். இங்க பொங்கல் வேலை நிறைய இருக்கு.”
“சரிம்மா…”
இருவரும் கோவிலுக்கு சென்றனர்.
முற்றத்தில் பொங்குவதற்காக அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்தார் ரஞ்சனி. காவ்யாவும் அனுவும் கோவிலால் வந்ததும் பொங்கல் வேலைகளில் இணைந்து கொண்டனர்.
முற்றத்தில் மாட்டு சாணகத்தினால் மெழுகி கோலமிட்டாள் காவ்யா. புதினமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அனு.
“சாணகத்தின் வாசம் எப்பிடிடி?” காவ்யா கேட்டாள்
“பழகிக்க வேண்டியது தான்…”
“அப்பிடியா… அப்போ சாணகத்தில ஒரு பிள்ளையார் பிடிச்சு இந்த கோலத்துக்கு மேல வைச்சு பூவும் அருகம்புல்லும் வைச்சுவிடு”
அருவருப்பாக இருந்தாலும் சொன்னதை செய்தாள்.
“ஏன்மா அனு… உனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம். ராணி மாதிரி இருக்க வேண்டியவள் இதையெல்லாம் செய்யணுமா…?” அம்மா கேட்டார்.
வெறும் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றாள்.
காவ்யாவும் அனுவும் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்தனர்.
ஒன்றாக அமர்ந்திருந்து அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
“ஆன்டி… பொங்கல் எப்பிடி இருக்கு…?” – அனு
“நல்லா இருக்குமா. ஆனா… நீ தான் கஷ்டப்பட்டுடல…?”
“இல்லை ஆன்டி. எனக்கு பிடிச்சுத்தான் செய்தேன். இந்த வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்தாலும் மனசுக்கு சந்தோசமாக இருக்கு…”
“உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா எங்க கதை முடிஞ்சிடும்”
“உண்மைய சொன்னா எனக்கு அந்த பகட்டு வாழ்கையில கொஞ்சமும் ஆசையில்லை ஆன்டி. எங்க கலாச்சார வாழ்க்கை வாழத்தான் ஆசை. அதுக்கு தான் இங்க வந்தேன். இப்பிடியெல்லாம் முற்றத்தில பொங்கி படைச்சு சாப்பிட்டு பழக்கம் இல்லை ஆன்டி. உண்மையிலயே மனசு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.”
தொடர்ந்தாள்,
“அங்க என்றால் வீட்டுக்குள்ள சம்பிரதாயத்துக்காக கொஞ்சமாக பொங்குவோம். பலகாரங்களை கடையில வாங்குவோம். சரி. அங்கயும் கோவில் இருக்கு. போவோம் தான். ஆனாலும் இங்க போகும் பொழுது வருகிற மன அமைதி அங்க இல்லை ஆன்டி. இண்டைக்கு போன பொழுது அப்பிடியே இன்னும் கொஞ்ச நேரம் நின்றிடலாம் போல இருந்திச்சு. இங்க இருக்கிற அமைதியான சந்தோசமான வாழ்க்கை அங்க இல்லை ஆன்டி. இங்க இருக்கிறவங்களுக்கு அது பெரிதாக இருக்கலாம். எனக்கு அப்பிடி இல்லை.”
“ஆன்டி… எனக்கு இந்த ஊரை சுற்றி பார்க்கணும்னு ஆசையா இருக்கு…”
“அதுக்கென்ன… காவ்யாவோட போயிட்டு வா. பார்த்து நடந்துக்கணும். உன்னை மாதிரி அழகான பொண்ணை பார்த்தா நாக்கை தொங்க போட்டுடு பின்னாலேயே வருவானுக பொறுக்கி நாய்கள்… கவனமாக போயிட்டு வாங்க…”
இருவருமாக ஊரை சுற்றி பார்க்க புறப்பட்டனர்.
விடுமுறை முடிந்ததும் அனு கொழும்பு சென்றாள். காவ்யாவின் வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் தன தாய் தந்தையரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
மாதங்கள் ஓடி வருடங்கள் சில கடந்தது.
“அனு குட்டி… உனக்கு ரெண்டு மூன்று மாப்பிளைட படம் வந்திருக்குமா… பார்த்து பிடிச்சதை சொல்லு. எல்லாமே நல்ல இடம்…” அனுவின் தாய் கூறினார்.
“இப்ப என்ன அவசரம்மா கல்யாணத்துக்கு…?”
“அவசரம் ஒன்றும் இல்லை குட்டி. வீடு தேடி வந்த வரனை ஏன் தட்டுவான் என்று பார்க்கிறான்.”
“அதுக்கில்லை….” என இழுக்கவும்,
“நீ யாரையாவது விரும்பிறியா…? அப்பிடி இருந்தா சொல்லு. எங்களுக்கும் ஓகே என்றா அவனையே கட்டி வைச்சுடுறம்…”
“அது… வந்து… என்னோட பிரெண்ட் காவ்யாவோட அண்ணனைத் தான்… “
“என்ன அனு விளையாடுறியா… அவங்க எங்கே. நாம எங்கே. அவங்க கூட எப்பிடி சம்பந்தம் வைச்சுக்க முடியும்… உன்னால அவங்க கூடெல்லாம் வாழமுடியாது கண்ணு… புரிஞ்சுக்கோடா….”
“அம்மா… கவ்யாவோட அண்ணனை காவ்யா மூலம் தெரியும். அப்புறம் பேஸ் புக் ல சட் பண்ணிக்குவோம். போன் ல கதைக்கிறனான். இன்னமும் காவ்யாக்கு கூட தெரியாது. இது ஆரம்பிச்சு நான்கு ஐஞ்சு வருஷம் வரும். ஒருதடவை காவ்யா வீட்டுக்கு போயிட்டு வந்தன் தெரியுமா… அது கூட அவங்களை போய் பார்த்து பழகிக்கணும் என்கிற ஆசையில போனது தான். அவங்க வாழ்கை முறை எப்பிடி என்று காவ்யா சொல்லி இருக்குறாள். ஆனாலும் நானும் பழகிக்கணும் என்று தான் போனேன். என்னால வாழமுடியும் அம்மா. இப்பெல்லாம் அடிக்கடி போய் வாறதால பழகிட்டுது. அவங்களுக்கும் தெரியாது நான் ஏன் வந்து போறேன் என்று… எல்லாமே காரியமாக தான். அவர் இப்ப கட்டார்ல நல்ல வேலையில இருக்குறார். இன்னும் இரண்டு மூன்று வருசத்தில திரும்பி வந்து தனியாக தொழில் ஆரம்பிக்க போகிறார். ப்ளீஸ் மா… முடியாது என்று மட்டும் சொல்லிடாதீங்க…” அனு கெஞ்சி கேட்டாள்.
சற்று நேர யோசனையின் பின்…
“அனு… எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நானும் ஏதோ நீ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தான் சொல்றியோ என்று பயந்தேன். ஆனா… தெளிவாக தான் ஒவ்வொரு காயாக நகர்த்தியிருக்கிறாய். சும்மா வாய் பேச்சில என்னால முடியும் என்றுட்டு அங்க போய் கஷ்டப்பட வேண்டி இருக்கும். அவங்க வாழ்கை முறையை வாழ்ந்து பார்த்திட்டாய். உன்னால சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கு. அந்த நம்பிக்கை உனக்குள்ள இருக்கும் பொழுது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைமா. அவங்க கிட்ட சொல்லு. முறைப்படி வந்து பொண்ணு கேட்க சொல்லி. அடுத்த முகூர்த்ததிலயே கல்யாணத்தை முடிச்சிடலாம். சந்தோசம் தானே.”
தாய் சொல்லி முடிக்கவும் முகப்புத்தகத்தினூடக தகவல் காவ்யாவின் அண்ணனுக்கு பறந்தது.
முற்றும் ….
– கயல்விழி
நன்றி : எழுத்து.காம்