கதாநாயகிகளில் நடிப்பு மட்டும் அல்லாமல் தனித்திறமையுள்ளவராக இருப்பவர் ரம்யா நம்பீசன். நடிப்போடு பாட்டுப்பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. பல படங்களில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஒரு படத்தில் புல்லட் ஓட்ட வேண்டும் என்றவுடன் ஒரே நாளில் பயிற்சி எடுத்து, தைரியமாக ஓட்டிக்காட்டினார். இப்போது வெற்றி துரைசாமி இயக்கும் என்றாவது ஒரு நாள் படத்தில் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறார்.
இது குறித்து ரம்யா நம்பீசன் கூறும்போது, கிராமத்தில் குடும்பக் கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டிப் பிழைக்கும் பெண்ணாக வருகிறேன். முதல் நாள் மாடுகளை கையாளுவதில் எனக்கு சிக்கல் இருந்தது. அப்புறம் அந்த மாடுகளே பழகிவிட்டன என்றார்.
இப்படம் விவசாயம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறது.