தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் நாக சவுரியா. இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடு மஞ்சுரேவுலாவில் உள்ள நாகசவுரியாவின் பண்ணை வீட்டில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 24 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாக சவுரியாவின் நெருங்கிய நண்பர் சுமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.24 லட்சம் ரொக்கம், ஸ்வைப்பிங் மெஷின், சீட்டு கட்டுகள், கார்கள், மொபைல் போன்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த பண்ணை வீட்டை நாக சவுரியா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சூதாட்டத்தில் நாக சவுரியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.