முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வளர்ச்சி திட்டங்களை செயற்படுத்துவது பற்றியும் முதலீடு செய்வது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக் குறித்து ருவிட்டரில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் இதன்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கையின் உறுதியான நம்பகத்தன்மை மிக்க சகாவாக விளங்கும் என உறுதியளித்தாக தெரிவித்துள்ள அவர், 400 மில்லியன் டொலர் பணப்புழக்கத்தினை பரிமாறிக்கொள்வது குறித்து சாதகமாக ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுக்கான ஒரு மில்லியன் டொலர் கடன் மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கான 500 மில்லியன் டொலர் உட்பட எல்ஓஐசி குறித்தும் ஆராய்ந்தோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.