43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கணிசமான திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவுப் பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல்,கட்டுப்பாட்டு ஆணைகள், உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல், நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்த்து வைத்தல் போன்ற அம்சங்கள் உள்ளடங்குவதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அணுகலுக்கான விதிகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்ளும் உரிமை, நீண்டகாலக் கைதிகளுக்கு பிணை வழங்குதல், வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற அம்சங்களும் அதில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.