உத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தாம் முன்வைத்துள்ள திருத்தங்கள் உரிய வகையில் கவனத்திற் கொள்ளப்படுமானால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகளின் சார்பில் அக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பல தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அது தொடர்பில் நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேற்படி கட்சிகள் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னரே யோசனைகளை முன் வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 21 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.