சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் புதுப்பிக்கப்பட்ட ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஓர் இடம் முன்னேற்றம் கண்டு ஏழாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
இது அவரது சிறந்த பந்துவீச்சு தரவரிசை என்பதோடு அவரது சுழற்பந்து சகாவான வனிந்து ஹசரங்க இந்த தரவரிசையில் ஆறாவது இடத்தில் மாற்றம் இன்றி நீடிக்கிறார்.
ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாக பந்து வீசிய தீக்ஷன ஆறு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
இதற்கு முன்னர் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் அடம் சம்பா ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதோடு ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் நான்காவது இடத்திற்கு வந்துள்ளார்.
ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.
ரி20 துடுப்பாட்ட வீரர் தரவரிசையின் முதல் பத்து இடங்களில் ஒரே மாற்றமாக பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க தொடர்ந்தும் எட்டாவது இடத்தில் நீடிக்கிறார்.