ரொக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தயாராகியுள்ள ‘ஓ பெண்ணே’ என்ற சுயாதீன பாடல் இசை வீடியோ அல்பம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுவைத்தார்.
‘சச்சின்’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘மன்மதன் அம்பு’, ‘வேங்கை’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர இசையமைப்பாளராகவும் பாடகருமாக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இவர் தமிழை விட தெலுங்கில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது அவர் ‘ஓ பெண்ணே..’ என தொடங்கும் சுயாதீன பாடல் இசை வீடியோ அல்பமொன்றை உருவாக்கி, வெளியிட்டிருக்கிறார்.
இந்த அல்பம் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடியது மட்டுமன்றி, பாடலுக்கான நடனத்தையும் வடிவமைத்து இயக்கியவர் தேவி ஸ்ரீ பிரசாத் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து, இந்தப் பாடலை அனைத்து மொழிகளிலும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்தப் பாடல் உருவான விதம் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில்,
”கொரோனா காலகட்டத்தின்போது தான் சுயாதீன பாடல் உருவாக்கம் குறித்த எண்ணம் உதித்தது. இதன் காரணமாகத்தான் சுயாதீன கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொக் ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன்.
இந்தப் பாடலின் நோக்கமே சுயாதீன கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பதேயாகும்.
இந்த பான் இந்தியன் பொப் அல்பத்துக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை. இதன் உருவாக்கத்துக்கு உதவிய பூஷன் குமார் அவர்களுக்கு நன்றி” என்றார்.
பாடலை வெளியிட்டதை பற்றி உலக நாயகன் கமல்ஹாசன் கூறுகையில்,
”திரையிசை பாடல்களை கடந்து சுயாதீன பாடல்கள் ஏராளமாக வரவேண்டும். இசைக் கலைஞர்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
திரையிசை கலைஞர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். ஆனால், சுயாதீன பாடல்களில் இசைக்கலைஞர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தலாம்.
திரைப்பட இசைத்துறையை விட சுயாதீன பாடல்கள் மிகப்பெரிய இசைத்துறையாக வளர வேண்டும். அதற்குண்டான தகுதி அதில் இருக்கிறது.
கடந்த காலங்களில் சுயாதீன பாடல்கள், தனி பாடல்கள், பக்தி பாடல்கள் என்ற வரிசையில் அதிகமாக இருந்தது. தற்போது அவை மறைந்துவிட்டன. மீண்டும் அவை வரவேண்டும்.
அத்தகைய முயற்சியை தொடங்கியிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ‘ஓ பெண்ணே..’ பாடல் பெரும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.