யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நினைவாக வருடந்தோறும் நினைவுப் பேருரை இடம்பெற்று வருவது அப்பல்கலைக்கழகத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இந்த வருடத்திற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் 17-11-2022 அன்று வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் புகழ்பூத்த கணிதவியல் அறிஞருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் நிகழும் மேற்படி நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளரும் கவிஞரும் விமர்சகருமாகிய கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளார். காலனிய கால இலங்கைத் தமிழ்ச் சமூகம் தொடர்பான முக்கியமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ள அவர், “நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்” எனும் பொருளில் தமது பேருரையை நிகழ்த்தவுள்ளார்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஈழத்தின் புகழ்மிக்க கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
ஆகஸ்ட் 1977இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகவும் அதன் பின்னர் ஜனவரி 1979இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தராகிச் சிறப்பாகப் பணியாற்றினார். தன்னால் இயன்றளவில் யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றினை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது நினைவாகவே இந்த நினைவுப் பேருரை இடம்பெறுகிறது.