“வடக்கு மாகாண ஆளுநரால் நியதிச் சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றமை பெரும் அத்துமீறல். இது சட்டவிரோதமான – முறையற்ற நடவடிக்கை. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரிடம் கடிதம் ஊடாக முறையிடவுள்ளோம்.”
– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ். கல்வியங்காட்டில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளார். வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றும் சுற்றுலா தொடர்பான விடயம் என இரண்டு நியதிச் சட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை. சட்டவிரோதமானவை. முறையற்றவை. மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்துக்கு முரணானவை.
மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது. எனவே, ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதிக்கும் அது இல்லை. எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.
இவர் துணிவாக – எதேச்சதிகாரமாக இரண்டு நியதிச் சட்டங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார். இது பாரதூரமான ஒரு விடயம். அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அரசியல் ரீதியில் பாதிப்பான விவகாரம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாகக் காணப்படுகின்றது.
இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டும். ஆளுநரின் எதேச்சதிகாரமான அதிகாரத்தைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார். எனவே, இந்த விடயத்தை உடனடியாக ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.