பருத்தித்துறை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டக் கூட்டம் காலை 10:30 மணியளவில் தவிசாளர் அ.சா. அரியகுமார் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய அமர்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஓர் உறுப்பினருமாக 20 பேரும் வரவு – செலவுத் திட்டத்துக்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தனர்.
இதனால் வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
21 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான எஸ்.தியாகலிங்கம் அண்மையில் காலமானதால் இன்றைய சபை அமர்வில் 20 உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“பருத்தித்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட செய்தி எமது பிரதேசத்துக்கான அபிவிருத்தியில் சபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஒருமித்த பயணத்தை எடுத்துக் காட்டுகின்றது” – என்று தவிசாளர் அ.சா. அரியகுமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.