தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ரணில் எங்களை சர்வகட்சிக் கூட்டம் எனப் பட்டம் விட்டு ஏமாற்ற நினைக்கின்றார். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சர்வகட்சிக் கூட்டம் என்பது வழமையான ஏமாற்று வேலைதான். ஆனால், நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றோம் என்பதைச் சர்வதேசத்துக்குச் சொல்வதற்காகவேனும் இந்தச் சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
தொல்லியல் திணைக்களத்தாலும், வன உயிரிகள் திணைக்களத்தாலும், இதர விடயங்களாலும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் அபகரிக்கப்படுவது உடன் நிறுத்தப்படுவதுடன் இதுவரை அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களுக்குக் கையளிக்கப்பட வேண்டும், அரசமைப்பின் குறிப்பிடப்பட்டுள்ளதன் படியான அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மாகாண சபைத் தேர்தலும் உடன் நடத்தப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்களைத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அண்மைய சந்திப்பின்போது மேற்கொண்டிருந்தோம்.
இந்த மூன்று தீர்மானங்களும் ஈ.பி.டி.பி. உள்ளிட்ட சகல தமிழ் அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை. எனவே எல்லாத் தமிழ்க் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வியூகத்துடன் இந்தச் சர்வகட்சிக் கூட்டத்தைத் தமிழ் மக்களின் சார்பில் அணுகவுள்ளோம்” – என்றார்.