“தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 இலட்சத்து 34 ஆயிரத்து 690 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்” – என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.
2 ஆயிரத்து 894 பரீட்சை நிலையங்களும், 494 தொடர்பாடல் – இணை அலுவலகங்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
“இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி இரண்டு வினாத்தாள் முதலாவதாகவும், பகுதி ஒன்று வினாத்தாள் இரண்டாவதாகவும் வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாடசாலை ஒன்றில் மூன்று பரீட்சை நிலையங்கள் இருந்தால் அந்த மூன்று நிலையங்களிலும் உள்ள கடிகாரங்கள் ஒரேநேரமாக இருக்க வேண்டும்.
பொறுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் கடிகாரமும் அந்த நேரத்துக்கு ஒத்ததாக – சரியான நேரமாக இருக்க வேண்டும்” – என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.