தயாரிப்பு: யாஷ் ராஜ் பிலிம்ஸ்
நடிகர்கள்: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜோன் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர்.
இயக்கம்: சித்தார்த் ஆனந்த்
மதிப்பீடு: 2.5/5
பொலிவுட் நடிகர் ஷாருக்கான் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு எக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பதான்’ ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா என்பதனை தொடர்ந்து காண்போம்.
இந்திய அரசுக்காக உளவு பார்க்கும் பணியில் ஷாருக்கான் மற்றும் ஜோன் ஆபிரகாம் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் ஜோன் ஆபிரகாம் ஒரு கட்டத்தில் ஆபிரிக்க நாட்டில் உள்ள தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்படுகிறார். அவரை விடுவிக்க தீவிரவாதிகள் கோடிக்கணக்கில் ரொக்க தொகையை கேட்க, தீவிரவாதிகளிடம் அரசும் இராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தாது என இந்திய இராணுவம் பதிலளிக்கிறது.
இதனால் கோபமடைந்த தீவிரவாதிகள் ஜோன் ஆபிரகாமின் மனைவி மற்றும் அவருடைய வயிற்றில் இருக்கும் சிசுவை கொன்றுவிடுகிறார்கள். இதனால் ஜோன் ஆபிரகாம் இந்தியாவுக்கு எதிராக சதி செய்யத் தொடங்குகிறார்.
இந்நிலையில் இந்திய அரசாங்கம் காஷ்மீர் தொடர்பாக அரசியல் ரீதியான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள, இதனால் ஆத்திரமடையும் பாகிஸ்தானிய இராணுவ உயரதிகாரிகள் இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க திட்டமிடுகிறார்கள். இதனை ஜோன் ஆபிரகாம் உதவியுடன் நிறைவேற்றும் செயல்திட்டத்தை உருவாக்குகிறார்கள். இதனை அறிந்த ஷாருக்கான், இந்தியா மீதான அவர்களின் உயிரியல் ஆயுத தாக்குதலை முறியடித்தாரா, இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இதுபோன்ற எக்ஷன் கலந்த தேசபக்தி படைப்புகளை உருவாக்குவதில் வல்லவர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் மூன்று சண்டைக் காட்சிகள் மற்றும் சேசிங்கும், இரண்டாம் பாதியில் ரஷ்யாவில் சண்டைக் காட்சிகளை அமைத்து ரசிகர்களுக்கு முழு அளவிலான எக்ஷன் விருந்தினை படைத்திருக்கிறார். அதிலும் பனி படர்ந்த மலையில் துவிச்சக்கரவண்டியின் மீதான சாகச பயணமும் சண்டை காட்சிகளும் கண்களை அகல விரிய வைக்கின்றன.
இராணுவத்தில் பணியாற்றி மாற்று திறனாளியான வீரர்களின் தேச பக்தி உணர்வை ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பை உருவாக்கி, தேசத்துக்கு எதிரான தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தலாம் என்ற இயக்குநரின் சிந்தனைக்கு சல்யூட்.
57 வயதாகும் ஷாருக்கான் 27 வயது இளைஞரை போல் உடல் தோற்றத்தை வைத்துக்கொண்டு, எக்ஷன் காட்சிகளில் நடித்திருப்பதும், காதல் காட்சிகளில் நடித்திருப்பதும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் ஜோன் ஆபிரகாமும் தன் பங்குக்கு நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நடிகை தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடித்திருப்பதுடன் சில எக்ஷன் காட்சிகளிலும் நடித்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அத்துடன் ஷாருக்கானுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் படங்கள் வணிக ரீதியாக பாரிய அளவில் வெற்றியை பெறும் என்பதை மீண்டும் ‘பதான்’ உறுதிப்படுத்தி இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவு, பின்னனி இசை இயக்குநருக்கு வலுவாக தோள் கொடுத்திருக்கிறது. உடைந்த ஓடுகள் குறித்த ஜப்பானிய பழமொழியை வலிமையான வசனமாக மாற்றியிருக்கும் வசனகர்த்தாவையும் பாராட்டலாம்.
சல்மான் கான்… அவரும் ஒரு வகையினதான உளவாளி என கதாபாத்திரத்தை வடிவமைத்து, அவர் சிக்கலில் இருக்கும் ஷாருக்கானை காப்பாற்றுவது போல் புத்திசாலித்தனமாக காட்சி அமைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் படத்தின் இறுதியில் பேசும் வசனங்கள் குறித்து திரையுலகினரிடையே மாற்றுக்கருத்து ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தேசபக்தியை நினைவூட்டியதால் பதானை தாராளமாக வரவேற்கலாம்.
பதான் – ஷாருக்கானின் மாரத்தான்.