இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த மார்ச் மாதமே மிகக் குறைந்த வெப்பநிலையை இங்கிலாந்து எதிர்கொண்டுள்ளது.
இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் பனி மற்றும் பனிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மாலை நேரங்களில் பயணிகள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் ஆகக் குறைந்த வெப்பநிலை -8C ஆகப் பதிவாகியுள்ளது.
பிரிஸ்டல் விமான நிலையத்தில் பனி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை புறப்பட வேண்டிய 27 விமான சேவைகள் பனி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் பர்மிங்காமுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை, பனிப்பொழிவு காரணமாக தெற்கு வேல்ஸில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த மோசமான பனிப்பொழிவு இந்த வார இறுதி வரை நீடிக்கும் என்றும் வடக்கில் இந்நிலைமை மோசமடையலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.