ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ‘யானை’ மக்களை மிதித்துக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற வட்டார மட்ட மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் வாழ்வை அழிக்கும் ராஜபக்சக்களைக் காக்கும் யானை அரசுதான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ளது. யானை – காக்கை – மொட்டு கூட்டணி அரசு வரிச்சுமையையும் பொருட்களின் விலையையும் அதிகரித்துப் பொருளாதாரத்தையும் சீரழித்து மக்களின் வாழ்வையும் நிலைகுலைக்கும் சூழலையே உருவாக்கி வருகின்றது.
மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்த அரசு திருடர்களைப் பிடிப்பதாக இல்லை. அரசு திருடர்களுடன் டீல் போட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி என்பது திருடர்களுடன் டீல் போடும் கட்சியல்ல. எமது கட்சி மக்களுடன் மட்டுமே டீல் போடும் அரசியல் கட்சியாகும்.
ஜனாதிபதியால் ஜனநாயகப் போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்யும் ஜனாதிபதி, தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களால் மட்டுமே பதில் வழங்குகின்றார்.
இந்தக் கோழைத்தனமான அரசுக்கு எதிராக மௌனமாக இருப்பதா அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் வீதியில் இறங்கி இந்த முட்டாள்தனமான அரசை விரட்டியடிக்க ஒன்றிணைவதா என்று மனவேதனையுடன் இருக்கும் மக்களிடம் கேட்கின்றேன்” – என்றார்.