சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் இந்திய ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பி.கே. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் 3-இடியட்ஸ் புகழ் ராஜ் குமார் ஹிராணி. இந்த ஜோடியின் 3-இடியட்ஸ் படமும் அந்நாட்டில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
கடந்த மாதம் மே 24-ம் தேதி சீனாவில் உள்ள 5,400 திரையரங்குகளில் பி.கே. படம் வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கை அற்ற தேசமான சீனாவில் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் இந்த படம் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் குழப்பம் நிலவியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றே நாட்களில் இந்திய ரூ. 35 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்தது.
இந்நிலையில் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி இதுவரை இப்படம் 101.84 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பல திரையரங்குகளில் பி.கே. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.