வவுனியா வடக்கின் எல்லைப் பகுதிகளில் (அனுராதபுரத்தில்) குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் கிராமங்கள் சிலவற்றை, வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்துக்குள் உள்ளெடுப்பதற்காக அவதானம் செலுத்துமாறு, தேசிய எல்லை நிர்ணய குழுவால் வவுனியா மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலொன்று, வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது தேசிய எல்லை நிர்ணய ஆணைக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
போர் முடிந்த பின்னர் வவுனியா வடக்கின் எல்லைப் பகுதிகளில் பெரும் காடுகள் அழிக்கப்பட்டு அரசின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட பெரும்பான்மையின குடியேற்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து முன்னெடுப்பதற்காக அவதானம் செலுத்துமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வவுனியா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
போகஸ்வௌ-1, போகஸ்வௌ-2, வெகரதென்ன, கம்பிலிவௌ, நாமல்கம, நந்திமித்திரகம, சலினிகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாங்கள் அனுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் அரச நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் பல்வேறு அசௌகரியங்களையும் சந்தித்து வருவதாகவும், எனவே எம்மை வவுனியா மாவட்ட நிர்வாகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி செயலகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளதன் அடிப்படையிலேயே இது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று ஆராய்ந்த வவுனியா மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதிகளை வவுனியா மாவட்டத்துக்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்க முடிவெடுத்துள்ளது.
பல்வேறுபட்ட எதிர்ப்புக்களையும் மீறி அநுராதபுரத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தச் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குடியேற்றங்கள் வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று அப்போதே சுட்டிக்காட்டப்பட்டது. இந்தநிலையில், தற்போது நிர்வாக நடைமுறைச்சிக்கல்களைக் காரணமாகக் காண்பித்து அந்தக் கிராமங்கள் வவுனியாவுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.