கத்திக்குத்துக்கு இலக்கான வர்த்தகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நானுஓயா நகரில் நேற்றுமுன்தினம் (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். குறித்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.
நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கருப்பையா இராமசுந்தரம் என்ற வர்த்தகரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் – வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதால் இடம்பெற்றது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் இருவரும் தாமாகவே நானுஓயா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.