இலங்கையில் எந்தவொரு கொரோனாத் தடுப்பூசியும் இல்லாதமையால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களைப் பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகும்.
மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைக் கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிய மாறுபாடுகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி இல்லாத ஒரு நிலையில் இந்த மாறுபாடுகள் நாட்டுக்குள் நுழைவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.” – என்றார்.