“இலங்கையில் ஜனநாயகம் வலுவடைய வேண்டுமெனில் அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு ஜனநாயகம் வலுவடையும்போது தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண வழிபிறக்கும்.”
– இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய.
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை, எனவே, புதியதொரு அரசமைப்பின் ஊடாக அதற்கான விடை தேடப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதே ஜனநாயகமாகும். அந்த அதிகாரம் என்பது வாக்குரிமையாக மட்டும் இருக்கக்கூடாது. அதேபோல் அதிகாரப் பகிர்வின் மூலம் ஜனநாயகம் மேம்படும். அந்தவகையில் அதிகாரப் பகிர்வு கொள்கையை தேசிய மக்கள் சக்தி ஆதரிக்கும்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வெனக் கூறப்பட்டாலும் அவ்வாறு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. 13 முன்வைக்கப்பட்ட பின்னரே போர் உக்கிரமடைந்தது.
எனவே, அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில், அனைவரும் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக வாழும் வகையில் தீர்வுப் பொறிமுறை அவசியம். அதற்கேற்ற வகையில் புதிய அரசமைப்பொன்று அவசியம். இதனை இதயசுத்தியுடன் செய்யக்கூடிய அரசொன்றும் அவசியம்.” – என்றார்.