வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் சாவடைந்துள்ளார். அத்துடன் மேலுமொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று இன்று மாலை பயணித்துள்ளது. இதன்போது திடீரெனச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாகக் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக இரண்டு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே மரணித்தார் என்று வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.