“அரச புலனாய்வுப் பிரிவின் கணக்கில் இருந்து இப்போதும் பிள்ளையான் குழுவினருக்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா?”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தின்போது, ஜே.வி.பியினரால் தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்று இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
பிள்ளையான் கூறுகையில், “அநுரகுமார திஸாநாயக்க எனது பெயரைக் குறிப்பிட்டு கருத்துத் தெரிவித்தார். அரசியலுக்காக நீங்கள் எதனையும் பேசலாம். ஆனால், நீங்கள் ஒரு விடயத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். நீங்களும் அரசியல் செய்யும் காலத்தில் நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்து வந்த போது, உங்களுடைய அமைப்பால் (ஜே.வி.பி.) துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. அப்படியென்றால் நீங்கள் உங்கள் அமைப்பில் இருந்த பிணையில் விடுவிக்கப்பட்ட மகன்மார்களுக்கு உங்களின் பழைய துப்பாக்கிகள், வெடிகுண்டுகளைக் கொடுத்திருக்க முடியாதா?” – என்றார்.
இதன்போது பதிலளித்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவிக்கையில்,
“நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதாகக் கூறுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். அத தவறான கருத்து. எமது அமைப்பு ஆயுத அரசியலில் ஈடுபட்டது. அது முழுமையாக நிறைவடைந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்த முடியும். அரச புலனாய்வுப் பிரிவின் கணக்கில் மாதாந்தம் 35 இலட்சம் கணக்கில் வழங்கப்பட்டு பிள்ளையானின் குழு பராமரிக்கப்பட்டது. அவ்வாறு இப்போதும் 35 இலட்சம் வழங்கப்படுகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன்.” – என்றார்.