ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்கத் தூதரகம் தாமதிக்கின்றது என ‘த ஐலண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க முடியாது எனவும், அவருக்குப் பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் எனவும் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது எனவும் ‘த ஐலண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யு.எஸ்.எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் உள்ளன. அவருக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிலையம் ஆதரவளிக்கின்றது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்குக் கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் எனவும் ‘த ஐலண்ட்’ செய்தி வெளியிட்;டுள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதுவரிடம் சபாநாயகர் விளக்கமொன்றைப் பெறுவார் என நம்புகின்றேன் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனக்குப் பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள சரத் வீரசேகர, தனக்கு விசா வழங்கத் தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் சரத் வீரசேகர எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.